• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • யூடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்து போலீசாரிடம் சிக்கிய போலி மருத்துவர்! - அதிர்ச்சித் தகவல்கள்

யூடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்து போலீசாரிடம் சிக்கிய போலி மருத்துவர்! - அதிர்ச்சித் தகவல்கள்

போலி மருத்துவர்

போலி மருத்துவர்

யுடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்துவந்த போலி மருத்துவரை தெலங்கானா காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

  • Share this:
இந்தியாவில் கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் பெண் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்களும், முறையற்ற உறவால் கருவுற்ற இளம் பெண்களும் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் மையங்களை அணுகி செல்கின்றனர், அங்கு பெரும் பணத்தை பெற்றுக்கொண்டு உயிருக்கு ஆபத்தான கருக்கலைப்புகளை செய்கின்றனர்.

தெலங்கானாவில் பிஎஸ்சி மட்டுமே படித்த இளைஞர் ஒருவர், யுடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்ய கற்றுக்கொண்டு சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்து வந்தார். அவர் சிக்கியது எப்படி?

தெலங்கானாவின் வாரங்கல் அருகே ஹன்மகொண்டா பகுதியில் செயல்பட்டுக்கொண்டிருந்த நகர்ப்புற மருத்துவமனை ஒன்றில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்யப்படுவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர், போலீசாரின் உதவியுடன் நள்ளிரவில் அந்த மருத்துவமனையை சோதனையிடுவதற்காக சென்றுள்ளனர். அந்த சமயம் கருக்கலைப்பு ஆபரேஷன் செய்து கொண்டிருந்த போலி மருத்துவர் அந்து இந்திரா ரெட்டி (வயது 38) போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பினார்.

இதனிடையே போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்து இந்திரா ரெட்டி பிஎஸ்சி படித்துவிட்டு மருந்து நிறுவனம் ஒன்றில் மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தன்னுடைய வேலை ராஜினாமா செய்துவிட்டு இந்த கிளினிக்கை அவர் தொடங்கியிருக்கிறார். இவருடைய மருத்துவமனையில் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர்களை பணியமர்த்தியுள்ளார்.

ஊரக பகுதிகளில் பெண் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்களை கண்டறிந்து தன்னுடைய மருத்துவமனையில் கற்றுத்தேர்ந்த செவிலியர்களின் உதவியுடன் கருக்கலைப்பு செய்து வந்தார். ரெட்டி கருக்கலைப்பு செய்வது எப்படி என யூடியூபிலும், சில வெப்சைட்களிலும் பார்த்து கற்றுக்கொண்டிருக்கிறார். சாதாரண மற்றும் சிக்கலான கருக்கலைப்பு என இரண்டையும் அவர் செய்து வந்துள்ளார்.

இதனிடையே அந்த கிளினிக்கை காவல்துறையினரும், சுகாதாரத் துறையினரும் சீல் வைத்தனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், எங்களை பார்த்தவுடன் இந்திரா ரெட்டி தப்பிச் சென்றார், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு நடந்துகொண்டிருந்தது, ரத்தம் வழிந்தோடிய நிலையில் இருந்த அப்பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.

துணை மாவட்ட சுகாதார அதிகாரியின் புகாரின் பேரில் போலி மருத்துவர் அந்து இந்திரா ரெட்டி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருடைய மருத்துவமனை சீல் வைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் அவரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: