• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Rajiv Gandhi Assassination - ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினம் இன்று: ஒரு குட்டி பிளாஷ்பேக்!

Rajiv Gandhi Assassination - ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினம் இன்று: ஒரு குட்டி பிளாஷ்பேக்!

ராஜீவ் காந்தி

ராஜீவ் காந்தி

ராஜீவுடன் சேர்த்து அவருடைய பாதுகாவலர், போலீசார், பொதுமக்கள் என 14 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள்.

  • Share this:
இந்தியாவின் பிரதமராக இருந்த போது ராஜீவ் காந்தி, தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்திற்கு வருகை தந்த போது சென்னையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் மே 21ம் தேதி 1991ம் ஆண்டில் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வு நடந்து இன்றுடன் 30 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில் அது குறித்து ஒரு சின்ன பிளாஷ்பேக்-ஐ தற்போது தெரிந்து கொள்வோம்.

இந்தியாவுக்கு இரண்டு பிரதமர்களை தந்த மிகவும் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவராகினும் இங்கிலாந்தில் படித்து விட்டு நாடு திரும்பிய ராஜீவ் காந்தி, இந்தியன் ஏர்லைன்ஸில் விமானியாக பணிக்கு சேர்ந்தார். 1968ம் ஆண்டு தான் படிக்கும் போது காதலித்த இத்தாலியைச் சேர்ந்தவரான சோனியா காந்தியை திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய தாயார் இந்திரா காந்தி நாட்டின் பிரதமராகவும், சகோதரர் சஞ்சய் காந்தி எம்.பியாகவும் இருந்த போதிலும் அவர் அரசியலில் இருந்து விலகியே இருந்தார்.

இருப்பினும் 1980ம் ஆண்டு எதிர்பாராதவிதமாக நடைபெற்ற விமான விபத்தில் சகோதரர் சஞ்சய் காந்தி மரணம் அடைந்ததால் தாயின் விருப்பத்தின் பேரில் அவர் அரசியலில் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனது சகோதரரின் மறைவால் காலியாக இருந்த அமேதி தொகுதிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.பி ஆனார் ராஜீவ்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக்கப்பட்டார் ராஜீவ் காந்தி.

இந்த சூழ்நிலையில் 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அன்றைய தினமே இந்தியாவின் பிரதமராக நியமனம் செய்யப்படுகிறார் ராஜீவ். 1989ம் ஆண்டு வரை பிரதமராக நீடித்த காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதால் 1989 தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது.

இதற்கிடையே தமிழர் பிரச்னையை தீர்ப்பதற்காக இந்தியாவின் அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி வைத்ததன் மூலம் விடுதலை புலிகள் அமைப்பின் பகையை சம்பாதித்து வைத்திருந்தார் ராஜீவ் காந்தி.

1991ம் ஆண்டு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தார் ராஜீவ் காந்தி. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அம்பாஸிடர் காரில் அவர் புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் சென்று கொண்டிருந்தார். காரில் கல்ஃப் டைம்ஸ் பத்ரிகையின் நிருபர் நீனா கோபால் ராஜீவிடம் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். சுமார் 10.15 மணி அளவில் கார் பிரச்சார இடத்தை நெருங்கியது.

ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சார பேரணியை ராஜீவின் கார் அடைந்த போது அவர் காரில் இருந்து கீழிறங்கி மேடையை நோக்கி நடக்க தொடங்கினார்.

கட்சியினர் மற்றும் பள்ளி குழந்தைகள் ராஜீவிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திக் கொண்டிருந்த போது விடுதலை புலிகள் அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்த பெண் ஒருவர் ராஜீவிடம் காலில் விழுந்து ஆசி வாங்குவது போல நடித்து அவரின் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.

சரியாக இரவு 10.21 மணிக்கு ராஜீவ் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜீவுடன் சேர்த்து அவருடைய பாதுகாவலர், போலீசார், பொதுமக்கள் என 14 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள்.

1984ம் ஆண்டு ராஜீவ் பிரதமராக ஆக்கப்படுவதில் சோனியாவுக்கு துளியும் விருப்பமில்லை. இருப்பினும் கட்சியின் நலன் சார்ந்து அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். ‘அவர்கள் உங்களையும் கொலை செய்து விடுவார்கள்’ என்று சோனியா ராஜீவிடம் கூறியதற்கு ‘எனக்கு வேறு வழியில்லை நான் எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன்’ என பதிலளித்தார். 7 வருடங்களுக்கு பிறகு ராஜீவின் அந்த வார்த்தைகள் நிஜமானது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: