சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவியை கைது செய்தது ஏன்? காவல்துறை விளக்கம்..

சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவியை கைது செய்தது ஏன்? காவல்துறை விளக்கம்..

திஷா ரவி கைது

சுவீடன் நாட்டின் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க்குடன் தொடர்புடைய 22 வயதான திஷா ரவியை கடந்த 13-ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

  • Share this:
சுவீடன் நாட்டின் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க்குடன் தொடர்புடைய 22 வயதான திஷா ரவியை கடந்த 13-ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர் கடந்த ஒரு மாத காலமாக டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பதற்காக "டூல்கிட்" என்ற ஒரு ஆவணத்தை உருவாக்கி அதனை கிரெட்டாவுடன் பகிர்ந்து கொண்டதாக கூறி திஷா மீது தேசத்துரோக வழக்குபபதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை பெங்களூருவில் கைது செய்யப்பட்ட அவர் தலைநகர் புதுடெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அரசியல்வாதிகள் மற்றும் பிற செயற்பாட்டாளர்களிடமிருந்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இது எதிர்ப்பாளர்களை மௌனமாக்குவதற்காக அரசாங்கம் எடுத்துவரும் முயற்சி என குற்றம் சாட்டி வருகின்றனர். சமூக ஊடங்கங்களில் திஷாவுக்கு பெரும் ஆதரவு கிளம்பியுள்ளது.

கைது செய்யப்பட்டதற்கான காரணம்:

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கான `டூல் கிட்` ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் கிரெட்டா பகிர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது போராட்டத்தில் ஈடுபவர்கள், ஆதரவு தருபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நடைமுறைகள்தான் அந்த டூல் கிட் ஆவணம். அந்த ஆன்லைன் ஆவணத்தை திஷா ரவி தான் உருவாக்கி பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தில், கடந்த மாதம் தலைநகரில் வன்முறையைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நேரத்திற்குட்பட்ட செயல் திட்டங்கள் இருப்பதாக டெல்லி போலீசார் கூறுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தால் இயற்றப்பட்ட மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் கடந்த 2020 டிசம்பர் மாதம் முதல் டெல்லியின் புறநகரில் பகுதிகளில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உலக அளவில் ஆதரவு குவிந்து வந்தது. அதில், சுவீடன் நாட்டின் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க்கும் ஒருவர். இந்த நிலையில், கடந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குழு நகரின் மையப்பகுதிக்குள் நுழைய முயன்றது. போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதோடு வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை வளாகத்தைத் தாக்கினர்.

இதுபோன்ற நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் தான்  திஷா ரவி உருவாக்கிய மற்றும் தன்பெர்க்குடன் பகிர்ந்து கொண்ட "டூல்கிட்" ஆன்லைன் ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திஷாவின் வழக்கறிஞர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆவணத்திற்கான இணைப்பை ட்வீட் செய்து பின்னர் அதை நீக்கிய தன்பெர்க், திஷா ரவியின் கைது குறித்து தனக்கு எந்தக் கருத்தும் இல்லை என்று கூறியுள்ளார்.

திஷா தவிர வேறு யார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது?

இந்த ஆவணத்தின் பல ஸ்கிரீன் ஷாட்களை விசாரித்து, மேற்கு நகரமான மும்பையில் உள்ள வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப்பின் வீட்டில் விசாரணை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். ஆரம்பகட்டவிசாரணையில் டூல்கிட் ஆவணத்தை திஷா ரவி, ஜேக்கப் மற்றும் சாந்தனு ஆகிய மூன்று பேர் இணைந்து உருவாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் மூவரும் காலிஸ்தான் என்ற சுயாதீன சீக்கிய தாயகத்திற்கான இயக்கத்தின் ஆதரவாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்கள் தயாரித்த ஆவணத்தில் பிரிவினைவாத மற்றும் காலிஸ்தானிய சார்பு உள்ளடக்கம் இருப்பதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மும்பை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜாமீன் மனுவில், ஜேக்கப்பின் வழக்கறிஞர் கூறியதாவது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் "அமைதியான பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக" தகவல்களை ஆராய்ச்சி செய்து அவர்கள் பரப்புவதாகவும், வன்முறையைத் தூண்டுவதற்கான எந்த நோக்கமும் அதில் இல்லை என்றும் கூறினார்.

டூல்கிட் என்றால் என்ன?

போராட்டங்கள் நடத்தும்போது, அந்தப் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் செய்ய வேண்டிவை என்னென்ன என்பதை விளக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகைச் செயல்திட்டம்தான் 'டூல் கிட்.’ எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், போராட்ட செயல்திட்ட ஆவணம் அது. பொதுவாக, எந்தவொரு போராட்டத்தின் போதும், 'டூல் கிட்' பகிரப்படுவது வழக்கம்தான். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த காலநிலை மாற்றத்துக்கு எதிரான செயற்பாட்டாளரான கிரெட்டா தன்பர்க், தனது ட்விட்டர் பக்கத்தில் 'டூல் கிட்' ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அந்த ட்வீட்டில் இந்தியாவில் களத்திலுள்ள மக்களால் இந்த டூல் கிட் புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதன் பிறகு அதை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியிருந்தார். இந்த டூல்கிட் ஒரு ட்வீட் வங்கி வடிவத்தில் உருவாக்கிய பல்வேறு ட்வீட் மூலம் போலி செய்திகளை செயற்கையாக பெருக்க முயன்றது என காவல்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தார்.
Published by:Ram Sankar
First published: