ஹோம் /நியூஸ் /இந்தியா /

அக்னிபாத்துக்கு எதிராக ஏன் போராட்டங்கள் வெடிக்கின்றன? அரசாங்கம் என்ன சொல்கிறது

அக்னிபாத்துக்கு எதிராக ஏன் போராட்டங்கள் வெடிக்கின்றன? அரசாங்கம் என்ன சொல்கிறது

அக்னிபாத்துக்கு எதிராக ஏன் போராட்டங்கள் வெடிக்கின்றன?

அக்னிபாத்துக்கு எதிராக ஏன் போராட்டங்கள் வெடிக்கின்றன?

Agnipath Protest: பணிக்காலம், வயது வரம்பு, ஓய்வூதியம் இல்லாதது எனப் பல அம்சங்கள் இத்திட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ஆற்றாமையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. பீகாரில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையானதைத் தொடர்ந்து வட மாநிலங்கள் பலவற்றிலும் போராட்டங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.

அதே போல் தென்மாநிலமான தெலங்கானாவிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அங்குப் போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அக்னிபாத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுக்கும் நிலையில், அத்திட்டத்தின் கீழ் முப்படைகளில் இணைவோருக்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. 17 - 21 ஆக இருந்த வயது வரம்பு தற்போது 17- 23 ஆக தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த அக்னிபாத் திட்டம் ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்தவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், எதிர்காலம் குறித்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும், இது வேலை வாய்ப்பற்ற ஒரு சூழலை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பீகாரில் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்தனர்.

பணிக்காலம், வயது வரம்பு, ஓய்வூதியம் இல்லாதது என பல அம்சங்கள் இத்திட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ஆற்றாமையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பழைய முறைப்படியே முப்படைகளிலும் ஆட்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

அரசாங்கம் என்ன சொல்கிறது?

அக்னிபாத் சம்பந்தமாக நாடு முழுவதும் எழுந்துள்ள குழப்பங்கள் மற்றும் கேள்விகளுக்கு மத்திய அரசின் சார்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் இத்திட்டம் முப்படைகளின் செயலூக்கத்தை அதிகப்படுத்தும். இளைய சமுதாயத்தின் தொழில்நுட்பத் திறன் மற்றும் புத்துணர்ச்சி முப்படைகளுக்கும் பல புதிய வாசல்களைத் திறக்கும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 வருடங்கள் முடித்து வெளி வரும் அக்னிவீர்களில், தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நிதியுதவியும், கடனுதவியும் அரசுத் தரப்பில் செய்துத்தரப்படும்.

தற்போது முப்படைகளில் சேர்க்கப்படும் இளைஞர்கள் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமான இளைஞர்கள் வரும் ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் சேர்க்கப்படுவார்கள்.

இது இளமையான செயல்திறன் மிக்க இராணுவத்தை உருவாக்கும் முறை என்று உலக அளவில் நிரூபிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாது ராணுவத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை என்பது சரி பாதியாக இத்திட்டத்தின் மூலம் மாற்றம் காணும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்

அக்னிபாத் திட்டத்திற்குத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளன.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி “பதவி இல்லை, பென்சன் இல்லை, 2 வருடங்களுக்கு நேரடியான ஆள்சேர்ப்பு இல்லை, 4 வருடங்களுக்குப் பிறகு நிலையான எதிர்காலம் இல்லை, ராணுவத்துக்கு மத்திய அரசிடம் மரியாதையும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

இடதுசாரிகள், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாஜாகவைச் சேர்ந்த எம்பியான வருண் காந்தியும் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Army jobs, Indian army