Exit Poll Result 2021 : இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு: 5 மாநிலங்களில் ஆட்சி அமைக்கப் போவது யார்?

Exit Poll Result 2021 : இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு: 5 மாநிலங்களில் ஆட்சி அமைக்கப் போவது யார்?

மாதிரி படம்

தமிழகம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு மலை 7.30 மணிக்குப் பின்னர் வெளியாக இருக்கின்றன. 5 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?

  • Share this:
    மேற்குவங்கம் மாநிலத்தில் இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இன்று மாலை 6.30 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைகின்றது. இதனால், தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் அகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகளும் நிறைவடைகின்றது. அதன் பின்னர் மலை 7.30 மணியில் இருந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாக இருக்கின்றன.

    தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? மேற்கு வங்கத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்துமா அல்லது மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக முதலமைச்சராக மீண்டும் அரியணை ஏறுவாரா, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் என்ன நடக்கும்? மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் இறுதி கட்ட தேர்தல் முடிவடைந்த பின்னர் தேர்லுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாக உள்ளன.

    ஏப்ரல் 29 மாலை (இன்று) 7.30 மணி வரை தேர்தலுக்குக் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கும், ஒளிபரப்புவதற்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதன்படி, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ஊடகங்களில் நடத்துவதற்கும், வெளியிடுவதற்கும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்படது.

    தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மற்றும் அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்றது. இந்த 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது.

    தமிழ் நாடு

    தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமான தேர்தல் நடைபெற்றது. அதில் 71.43 சதவிகித வாக்குகள் பதிவாயின. அதிமுக கூட்டணியில், அதிமுக 179 தொகுதிகளில் தனித்து களம் இறங்கியது. பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரசு 6 தொகுதிகளிலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம் மற்றும் பசும்பொன் தேசிய கழகம் ஆகியவை தலா 1 தொகுயில் களம் கண்டன.

    மு.க.ஸ்டான் தலைமையிலான திமுக கூட்டணியில், திமுக 173 தொகுதிகளிலும், காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதிகளிலும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தலா 3 தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், ஃபார்வார்ட் பிளாக் கட்சி, தமிழக வாழ்வு உரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை ஆகியவை தலா 1 தொகுதியிலும் களம் கண்டன.

    இதேபோல, நடிகர் கமல்ஹாசன் தலைமையில் ஒரு கூட்டணியும், டிடிவி தினகரன் தலைமையில் ஒரு கூட்டணியும் அமைக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் சீமான் 234 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கினார். இதனால் 5 முனைப் போட்டி நிலவுகிறது.

    புதுச்சேரி

    30 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கே 81.64 சதவீத வாக்குகள் பதிவாயின. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில், பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

    புதுச்சேரியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. அதேபோல, என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

    கேரளா

    தமிழகம் மற்றும் புதுசசேரியைப் போலவே ஏப்ரல் 6 ம் தேதி 140 இடங்களில் கேரளாவின் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், 2.74 கோடி வாக்காளர்களில் 73.58 சதவீதம் பேர் வாக்களித்தனர். முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான தற்போதய இடது முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, மற்றும் பாஜக என மும்முணைப் போட்டி நிலவுகிறது.

    மேற்கு வங்கம்

    294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், எட்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு 35 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவின் முதல் சுற்று மார்ச் 27 அன்று நடந்தது, அதன் பின்னர் அடுத்த கட்டங்கள் முறையே ஏப்ரல் 1, 6, 10, 17, 22 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.

    பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா போன்ற பாஜக தலைவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் தற்போதய முதலமைச்சருமான மம்தா பானர்ஜிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அங்கே ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.

    அசாம்

    126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அசாமில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி உள்ளூர் கட்சிகள் சிலவற்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    Must Read : மேற்கு வங்கத்தில் நிலவும் மும்முனைப்போட்டி - ஆட்சியைப் பிடிப்பவர்களுக்கு இருக்கும் சவால்கள் என்ன?

     

    காங்கிரஸ் கட்சி 10 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து களம் இறங்கியது. இந்த இரு கூட்டணிகளுக்கு இடையில் ஆட்சியை பிடிப்பது யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
    Published by:Suresh V
    First published: