கொரோனா பரவல் காரணமாக, கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் அறிவித்துள்ளார்.
கொரோனா மூன்றாவது அலை பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பணியாளர் மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள விதிமுறைகள் குறித்து விளக்கியுள்ள மத்திய அறிவியல், தொழில்நுட்பம், பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜித்தேந்திர சிங், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அலுவலகம் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக இன்று அறிவித்துள்ளார். ஆனால், வீட்டிலிருந்து வேலை செய்யும் வகையில், பணி நேரத்தில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் நாளை முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி.. தகுதியானவர்கள் யார்?
கொரோனா கட்டுப்பாட்டு மண்டல பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கும் வரை விலக்கு அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
துணை செயலர்கள் அந்தஸ்துக்கு கீழ் உள்ள அரசு ஊழியர்களில் 50 சதவீதம் மட்டும் பணிக்கு வர அறிவுறுத்தப்படுவதுடன், எஞ்சிய 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணி செய்ய வேண்டும், சுழற்சி முறையில், இது அமல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும், வீடுகளில் இருந்து பணிபுரிவோர், தொலைபேசியில் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
அலுவல் கூட்டங்கள் கூடியமட்டும் காணொலி மூலம் நடத்தப்பட வேண்டும் என்றும், பார்வையாளர்களுடனான சந்திப்புகளை, மிகவும் தேவையாக இருந்தால் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பணியிடங்கள் சானிடைசர் தெளித்து தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகள் ஜனவரி 31 வரை அமலில் இருக்கும் என ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.
மேலும், அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு, சூழ்நிலைக்கு ஏற்ப விதிமுறைகள் மாற்றியமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே நாளை முதல் திருவண்ணாமலை கோயிலுக்குள் அனுமதி!இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.