மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசிகள் மீதான வரியில் 70%ஐ எடுத்துக் கொள்கின்றன. உண்மையில், பெயரளவு 5% ஜிஎஸ்டி உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளரின் நலனுக்காகவும் குடிமக்களின் நலனுக்காகவும் உள்ளது.
ஜிஎஸ்டியிலிருந்து தடுப்பூசி மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்திருக்கிறார். ஏற்கனவே சிலவற்றிற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் தடுப்பூசிக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளித்தால் அது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும் அது வாடிக்கையாளர்களுக்கு பலன் அளிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போரிடுவதில் உதவும் மருத்துவ உபகரணங்கள், மற்றும் மருந்துகள் மீதான சுங்க வரி, பிற வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்கள், கொள்கலன்கள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகளை நன்கொடையாக வழங்க பல நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் நற்பண்புள்ள தன்னார்வ நிறுவனங்கள் முன்வந்துள்ளன. எனவே சுங்க வரி, எஸ்ஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்க பரிசீலிக்க பல நன்கொடையாளர்கள் மாநில அரசை அணுகியுள்ளனர் என மம்தா அவரது கடிதத்தில் கூறியிருந்தார்.
மம்தா பானர்ஜி பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு பல ட்வீட்கள் மூலம் விளக்கம் தந்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
நிர்மலா சீதாராமன் அளித்துள்ள விளக்கம்:
1/ Hon. CM of West Bengal @MamataOfficial has written to the Hon @PMOIndia seeking exemption from GST/Customs duty and other duties and taxes on some items and COVID related drugs.
இறக்குமதி செய்யப்படும் கொரோனா நிவாரணத்திற்கான பொருட்கள் எவற்றிற்கெல்லாம் IGST-லிருந்து விலக்கு அளிக்கப்பட்டது என்பதற்கான பட்டியல் மே 3 அன்று வெளியிடப்பட்டது.
நாட்டில் இலவச விநியோகத்திற்காக செஞ்சிலுவை சங்கத்தால் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து கொரோனா நிவாரணப் பொருட்களுக்கும் ஐ.ஜி.எஸ்.டி உள்ளிட்ட சுங்க வரிகளில் இருந்து ஏற்கனவே முழு விலக்கு கிடைக்கிறது.
மே 3ம் தேதி முதல் ரெம்டெசிவிர் ஊசிகள், ரெம்டெசிவிர் ஏபிஐ (மூலப்பொருள்), ரெம்டெசிவிர் உற்பத்திக்கான வேதிப்பொருள், மருத்துவ ஆக்ஸிஜன், ஆக்ஸிஜனின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள். கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சையை வழங்க பயன்படும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் முகமூடிகள் போன்ற உபகரணங்கள். கொரோனா பரிசோதனை மற்றும் கொரோனா தடுப்பூசிகளுக்கான அழற்சி கண்டறியும் கருவிகளுக்கும் மே 3ம் தேதி முதல் முழு வரி விலக்கு தரப்பட்டுள்ளது.
ஒரு மாநில அரசு வழங்கிய சான்றிதழின் அடிப்படையில் எந்தவொரு நிறுவனம், மாநில அரசு, நிவாரண நிறுவனம் அல்லது தன்னாட்சி அமைப்பு. பட்டியலில் குறிப்பிட்டுள்ள எந்த பொருளையும் இறக்குமதி செய்து இலவசமாக வினிநோயகம் செய்யப்படும் போது முழுமையான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த பொருட்கள் கிடைக்கும் அளவை அதிகரிப்பதற்காக, வணிக இறக்குமதிக்கும் கூட சுங்க வரி மற்றும் சுகாதார செஸ் ஆகியவற்றிலிருந்து மத்திய அரசு முழு விலக்கு அளித்துள்ளது.
உள்நாட்டு தயாரிப்பு மற்றும் இந்த பொருட்களின் வணிக ரீதியிலான இறக்குமதி அடிப்படையில் ஜி.எஸ்.டி விகிதம் ஒவ்வொரு பொருளுக்கும் மாறுபடும். தடுப்பூசிகளுக்கு 5% ஜி.எஸ்.டி, கொரோனா மருந்துகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கு 12% ஜி.எஸ்.டி
ஒரு பொருளுக்கு IGST 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என வைத்துக் கொண்டால், இதில் மத்திய, மாநில அரசுகள் 50:50 என பிரித்துக் கொள்கிறது. இதில் மத்திய அரசு வசூலிக்கும் தொகையில் 41% மாநில அரசுகளுக்கே திருப்பிக் கொடுக்கப்படுகிறது. எனவே 100 ரூபாய் வசூலிக்கப்பட்டால் அதில் மாநில அரசுக்கு 70.50 ரூபாய் செல்கிறது.
இதில் ஜி.எஸ்.டிக்கு முழுமையான விலக்கு அளிக்கப்பட்டால் உள்நாட்டு உற்பத்தியாளர்களால் இந்த பொருட்களுக்கு அவர்களின் உள்ளீடுகள் மற்றும் உள்ளீட்டு சேவைகளில் செலுத்தப்படும் வரிகளை ஈடுசெய்ய முடியாது, எனவே விலையேற்றம் செய்து அதுவும் நுகர்வோர் மீது சுமையை ஏற்படுத்தும்.
கொரோனா தடுப்பூசிகள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக போடப்படுகிறது. இதற்கான ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசே செலுத்துகிறது.
எனவே மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசிகள் மீதான வரியில் 70%ஐ எடுத்துக் கொள்கின்றன. உண்மையில், பெயரளவு 5% ஜிஎஸ்டி உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளரின் நலனுக்காகவும் குடிமக்களின் நலனுக்காகவும் உள்ளது.
ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டால், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் உள்ளீட்டு வரிகளை ஈடுசெய்ய முடியாது மற்றும் விலையை அதிகரிப்பதன் மூலம் அந்த சுமை நுகர்வோருக்கே செல்லும்
5% ஜிஎஸ்டி வீதம் உற்பத்தியாளர் ITCயைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிசெய்கிறது மற்றும் ஐடிசி நிரம்பி வழிகிறது என்றால், பணத்தை திரும்பப்பெற முடியும். எனவே ஜிஎஸ்டியிலிருந்து தடுப்பூசிக்கு விலக்கு அளிப்பது நுகர்வோருக்கு பயனளிக்காமல் எதிர் விளைவையே ஏற்படுத்தும்.
Published by:Arun
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.