முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன் எடுக்கப்பட்ட பிரத்யேக வீடீயோ நியூஸ்18 தமிழுக்கு கிடைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கோவை மாவட்டம் சூலூர் வந்து அங்கிருந்த விமானப் படைதளத்தில் இருந்து குன்னூருக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு வந்து கொண்டிருந்த போது நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியது.
விழுந்து நொருங்கிய அந்த ஹெலிகாப்டரில் தீப்பற்றி எரிந்தது, அக்கம்பக்கத்தினர் சிலர் ஓடோடி வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கொளுந்து விட்டு எரிந்த ஹெலிகாப்பரில் இருந்து உடல்கள் பெரும் சிரமத்துடன் மீட்கப்பட்டன. இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி, அவரின் மனைவி மதுலிகா ராவத், மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் என அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த துரதிர்ஷ்ட சம்பவம், நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விபத்துக்குள்ளான எம்ஐ 17 வி5 ரக ராணுவ ஹெலிகாப்டர் உயர் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தது என கூறப்பட்டது. இருப்பினும் குன்னூரில் நிலவிய மோசமான வானிலை காரணமாக அல்லது தொழில்நுட்ப காரணங்களால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என பல்வேறு கோணங்களில் பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த விபத்தை நேரில் கண்ட உள்ளூர்வாசிகள் ஹெலிகாப்டர் தடுமாறிய நிலையில் மரத்தின் மீது மோதி தீப்பிடித்ததாக கூறினர். ஒருசிலர் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்குவதற்கு முன் பயங்கர சத்தம் கேட்டதாகவும் கூறினர். இந்த விபத்து குறித்த வீடியோக்கள் ஏதும் வெளியாகாமல் இருந்து வந்தது.
Also read:
உதகையில் படித்தவர்.. ராணுவ குடும்பத்தை சேர்ந்த ஜெனரல் பிபின் ராவத்தின் பின்னணி
இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கும் முன்னர் எடுக்கப்பட்ட பிரத்யேக வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கும் முன்னர் அப்பகுதியில் சுற்றுலா சென்ற ஒருவர் அந்த விபத்தை தனது மொபைலில் பதிவு செய்துள்ளார். உதகை மலை ரயில் இருப்புப் பாதையில் சுற்றிப் பார்க்க வந்த குடும்பத்தினர், அப்பகுதியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், ஹெலிகாப்டர் பலத்த சத்தத்துடன் அவர்களை கடந்து செல்கிறது. அப்போது அந்த பகுதியில் அடர் பனிமூட்டம் நிலவுவதை காண முடிகிறது. சுற்றிலும் வெண்புகையாக காட்சியளிக்கிறது. மேலும் ஹெலிகாப்டர் இஞ்சினில் இருந்து வரும் சப்தம் வித்யாசமாகவும் இருக்கிறது.
ஹெலிகாப்டர் பறந்து சென்றது இயல்புக்கு மாறாக இருந்த நிலையில் அங்கிருந்தவர்கள் சத்தம் வந்த திசையை திரும்பிப் வானில் பார்க்கின்றனர், ஹெலிகாப்டர் தரையில் மோதியதைப் போல சத்தம் கேட்டதால், “என்னாச்சு உடஞ்சிருச்சா?” என ஒருவர் கேட்க அதற்கு வீடியோ எடுப்பவர் ஆமாம் என பதில் தருகிறார்.
விபத்துக்கு முன் எடுக்கப்பட்டு தற்போது வெளியாகி இருக்கும் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.