• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மரக்கட்டில்... மின்விசிறி... சிறிய அறை... திகார் சிறையில் ப.சிதம்பரத்தின் முதல் அனுபவம்

மரக்கட்டில்... மின்விசிறி... சிறிய அறை... திகார் சிறையில் ப.சிதம்பரத்தின் முதல் அனுபவம்

மேற்கத்திய கழிப்பறை வசதி கொண்ட சிறிய அறையை தவிர வேறு எந்த சிறப்பு வசதிகளும் இங்கு செய்து கொடுக்கவில்லை.

  • Share this:
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்துக்கு, அசவுகரியமாக இருந்ததால் முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திகார் சிறையில் உள்ள 7ஆம் எண் அறையில் அடைக்கப்பபட்டுள்ளார்.

பொருளாதார குற்றங்களில் சிக்கியவர்களுக்கு இந்த அறை ஒதுக்கப்படுவது வழக்கம். மேற்கத்திய கழிப்பறை வசதி கொண்ட சிறிய அறையை தவிர வேறு எந்த சிறப்பு வசதிகளும் இங்கு செய்து கொடுக்கவில்லை.

10-க்கு 10 என 100 சதுர அடியில் அமைந்துள்ள அறையில் முதல் வகுப்பு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளான மரக்கட்டில் மற்றும் மின் விசிறி ஆகியவை மட்டும் உள்ளன.

சிறை விதிப்படி ப.சிதம்பரம் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் எழ வேண்டும்.  காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்ட பிறகு, நடை பயிற்சிக்கோ, உடல் பயிற்சிக்கோ அனுமதிக்கப்படுவார்.

மதிய உணவு 12 முதல் ஒரு மணிக்குள் பரிமாறப்படும். அவர் தொலைக்காட்சி பார்க்க விரும்பினால் சிறை நூலகத்திற்கு சென்று பார்க்கலாம். இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இரவு உணவு வழங்கப்படும். 9 மணிக்குள் அவர் தனது அறைக்குள் சென்றுவிட வேண்டும்.

ஏற்கனவே இசட் பிரிவு பாதுகாப்பில் இருந்தவர் என்பதால், அவர் அடைக்கப்பட்டுள்ள அறை பகுதியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், நீதிமன்றத்தில் சிதம்பரம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மருத்துவ பரிசோதனையுடன் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

இன்று காலை அவருக்கு தென்னிந்திய வகை உணவுகள் வழங்கப்பட்டன. ஐ.என்.எக்ஸ். வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட சிதம்பரத்தின் மகன் கார்த்தி, திகார் சிறையின் 7-ம் எண் அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதே அறையில் தான், தற்போது ப.சிதம்பரமும் அடைக்கப்பட்டுள்ளார். அத்துடன், காங்கிரஸ் கட்சியின் சஞ்சய் காந்தி, காமன்வெல்த் ஊழலில் சிக்கிய சுரேஷ் கல்மாடி, மாட்டுத் தீவன ஊழலில் சிக்கிய லல்லு பிரசாத் யாதவ், சஹாரா நிறுவனத்தின் சுப்ரதா ராய் உள்ளிட்டோரும் 7-ம் எண் அறையில் அடைக்கப்பட்டிருந்தனர்

சிதம்பரத்திற்கு வருகின்ற 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், 16-ம் தேதி அவர், 74-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அதற்குள், ஜாமின் கிடைக்காவிட்டால் தனது பிறந்த நாளை திகார் சிறையிலேயே கொண்டாட வேண்டியிருக்கும்.

Also Watch : திகார் சிறையில் தூக்கமின்றி தவித்த ப.சிதம்பரம்.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: