சரத்பவாருடன் அமித்ஷா ரகசிய சந்திப்பு? - மகாராஷ்டிர அரசியலில் உச்சகட்ட குழப்பம்!

சரத்பவாருடன் அமித்ஷா ரகசிய சந்திப்பு? - மகாராஷ்டிர அரசியலில் உச்சகட்ட குழப்பம்!

அமித் ஷா

மகாராஷ்டிர அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சரத் பவார் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • Share this:
சரத்பவாருடன் ரகசிய சந்திப்பு நடந்ததா என்ற அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பியதற்கு வெளிப்படையாக அனைத்தையும் பேச வேண்டியதில்லை என தெரிவித்துள்ளார். இது மகாராஷ்டிர கூட்டணி அரசில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கார் நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரின் உரிமையாளர் மான்சுக் ஹிரன் நீர்நிலை ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங், உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் உள்ளிட்ட 4 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இச்சூழலில் காவல் ஆணையர் பரம் வீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மகாராஷ்டிர காவல்துறை மாதந்தோறும் 100 கோடி ரூபாய் வசூலித்து தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடித விவகாரம் மகாராஷ்டிராவில் சிவசேனாவிற்கும், அனில் தேஷ்முக் சார்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உரசலை ஏற்படுத்தியது. அனில் தேஷ்முக்கை விமர்சித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்ரிகையான சாம்னாவில் கட்டுரையும் வெளியானது.

இந்நிலையில் அகமதாபாத்தில் சரத் பவார் மற்றும் பிரஃபுல் பட்டேல் ஆகியோர் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியானது.

இன்று பத்திரிகையாளர்கள் அமித்ஷாவிடம் இது தொடர்பாக கேட்டதற்கு வெளிப்படையாக அனைத்தையும் பேச வேண்டியதில்லை என தெரிவித்தார். இது மகாராஷ்டிர அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Arun
First published: