ஹோம் /நியூஸ் /இந்தியா /

நிலக்கரி சுரங்கத் தொழிலில் தனியாருக்கு அனுமதி: சூழலியலாளர்கள் எதிர்ப்பதற்கான காரணம் என்ன?

நிலக்கரி சுரங்கத் தொழிலில் தனியாருக்கு அனுமதி: சூழலியலாளர்கள் எதிர்ப்பதற்கான காரணம் என்ன?

நிலக்கரி

நிலக்கரி

இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்களை மீறி சூழலுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்திய பல்வேறு நிறுவனங்களில் Coal India ltd-ம் ஒன்று.

  • News18 Tamil
  • 6 minute read
  • Last Updated :

பிரதமர் நரேந்திர மோடியின் 20 லட்சம் கோடி மதிப்பிலான சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை நான்காம் கட்ட அறிவிப்புகளை அறிவித்தார்.

விண்வெளி, அணுசக்தி, ராணுவத் தளவாட உற்பத்தி, சமூகக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, விமான நிலையங்கள் உள்ளிட்டவை குறித்த அறிவிப்பில் நிலக்கரி மற்றும் கனிம சுரங்கத் துறை குறித்த அறிவிப்புகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  நிலக்கரி சுரங்கத்துறையில் வருவாய் பங்கீட்டில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும், நிலக்கரிச் சுரங்கங்களை யார் வேண்டுமானாலும் ஏலம் எடுத்து பொதுச் சந்தையில் விற்பனை செய்யலாம். வெளிப்படையான முறையில் 500 சுரங்கங்கள் விரைவில் ஏலம் விடப்படும்.

அலுமினிய உற்பத்தித் துறையில் போட்டியை ஊக்குவிக்க பாக்சைட் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்கள் சேர்த்து ஏலம் விடப்படும். சுரங்கங்களிலிருந்து நிலக்கரியைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார் நிர்மலா சீத்தாராமன்.

இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவில் நிலக்கரி சுரங்கத் துறையில் அரசின் ஏகபோக முற்றுரிமை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதியே நிலக்கரி சுரங்கத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் The Mineral Laws (Amendment) Bill, 2020  நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. மார்ச் 6ஆம் தேதி லோக்சபாவிலும், 12ஆம் தேதி ராஜ்யசபாவிலும் இந்தச் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது.

இந்த மசோதா குறித்த விவாதத்தின் போது ”இந்தியாவில் உள்ள நிலக்கரியை அகழ்ந்து எடுக்காமல் விட்டோமானால் அது வீணாக மண்ணாகி விடும்” என்று அமைச்சர் பிரகலாத் ஜோஷி  தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Coal India limited எனும் அரசு நிறுவனம் தான் உலகளவில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமாகும். இத்துறையில் ஆரோக்யமான போட்டி மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் சுரங்கத் தொழிலில் ஈடுபட விரும்பும் நிறுவனங்கள் தாராளமாக இந்தப் போட்டியில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நிலக்கரி உற்பத்தி மிகப்பெரும் உதவி புரிந்துள்ளது. உலகளவில் நிலக்கரியின் மூலம் மின்சாரத்தை அதிகம் பெறுகிற நாடுகளின் பட்டியலின் இந்தியாவிற்கு மூன்றாவது இடம். உலகளவில் அதிகமாக நிலக்கரியை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம்.

இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தியில் 54.2 சதவீதம் நிலக்கரியைச் சார்ந்துள்ளது. மின்சாரத்திற்கு மட்டுமின்றி  இரும்பு மற்றும் சிமெண்ட் ஆலைகளிலும் நிலக்கரி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரியால் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி என்பது இன்றியமையாதது என்றாலும்  நிலக்கரி உற்பத்தி மற்றும் போக்குவரத்து, பயன்பாடு ஆகியவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு மிக அதிகம்.

குறிப்பாக நிலக்கரி உற்பத்தியால் ஏற்படும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் உமிழ்வு, காற்று மற்றும் நீர் மாசுபாடு, நிலம் பாழடைதல், காடழிப்பு, வனவுயிர்களின் வாழ்விடம் கெடுதல் ஆகியவற்றை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் நிலக்கரியால் ஏற்பட்ட வளர்ச்சியை விட பாதிப்புகளே அதிகமென தோன்றும்.

2015ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு நிலக்கரி மட்டுமின்றி அனைத்து வகையான புதைவடிவப் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பது குறித்து பல நாடுகளும் விழிப்புணர்வு கொண்டுள்ளன. இந்தியாவும் கூட 2022ஆம் ஆண்டிற்குள் 175 மெகாவாட் அளவிற்கு புதுப்பிக்கத்த எரிசக்தி ஆற்றலின் உற்பத்திறனை அதிகரிக்கப் போவதாக தெரிவித்துள்ளது .

அதுமட்டுமின்றி பாரிஸ் ஒப்பந்தத்தின் படி இந்தியா 2030ஆம் ஆண்டிற்குள் 300 கோடி டன் அளவிற்கு கார்பனை உள்வாங்கும் திறனை அதிகரிக்கும் என்று ஒப்புக்கொண்டுள்ளது. அப்படி செய்ய வேண்டும் என்றால் தற்போது இருப்பதைவிட காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும்.

ஆனால் அதற்கான பெரிய அளவிலான முயற்சியை இந்தியா மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட India State of Forest Report ன் படி இந்தியாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 24.56 % வனப்பரப்பாகும். 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி இது 24.39ஆக இருந்தது.

இந்த நிலையில்தான் நிலக்கரி சுரங்கத்துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் விமர்சனத்துக்குள்ளாகிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ஐ.ஐ.டி. ரூர்க்கியைச் சேர்ந்த புவியியல் ஆய்வாளரும் கனிம சுரங்கங்களின் பாதிப்புகளை ஆவனப்படுத்தி வரும் ஆர்.ஸ்ரீதர் “கனிம சுரங்கம் மற்றும் நிலக்கரி சுரங்கத் துறையில் தனியாரையும் அந்நிய மூதலீட்டையும் ஈர்க்கும் நடவடிக்கைகளை ஜனவரி மாதமே மத்திய அரசு தொடங்கி விட்டது. அதற்கான சட்டத் திருத்தங்களையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி விட்டது.

அதுமட்டுமின்றி இந்தியாவின் மத்திய பகுதிகளில் 80 புதிய சுரங்கங்களை ஏலத்தில் விடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு தனியார் நிறுவனங்களோடு கொல்கொத்தாவில் ஜனவரி 28ஆம் தேதியும் மும்பையில் 29ஆம் தேதியும் கூட்டங்களையும் மத்திய நிலக்கரித்துறை நடத்தியது.

இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் நிலக்கரி சுரங்கங்களால் பாதிக்கப்படவுள்ள, வாழ்விடங்களை இழக்கப்போகிற மக்களின் கருத்தை அவர்கள் கேட்கவேயில்லை. நிறுவனங்களின் லாப நோக்கம் மட்டுமே அரசிற்கு முதன்மையானதாக உள்ளது. தனியாரையும், அந்நிய முதலீட்டையும் இத்துறையில் ஊக்குவிப்பதால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது.

நிலக்கரியின் தேவையை பல்வேறு நாடுகளிலும் குறைத்துவிட்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் நிலக்கரி சுரங்கத் தொழிலில் யாரும் தற்போது முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள். கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இந்தியாவில் 292 சுரங்கங்கள் நட்டத்தில் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார். இந்த சுரங்க செயல்பாடுகளால் 12,836 கோடி ரூபாய் அளவிற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சுரங்கங்களின் செயல்பாடுகளை நிறுத்தினாலே பெருமளவு நட்டத்தை குறைக்க முடியும்.

தனியாருக்கு நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் வழங்குவதன் மூலம் அந்த நிறுவனங்கள் திவாலானால் நாங்கள் பெரிய அளவிலான நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி பெற்றுள்ளோம் அதை தொடங்குவதால் என்னால் மீள முடியும் என்று  Balance Sheet ல் கணக்கு காட்ட மட்டுமே உதவும்.  மேலும் ஏலத்தில் பங்கெடுக்கும் நிறுவனங்கள் இத்துறையில் முன் அனுபவம் போன்ற எவ்வித தகுதிகளையும் பெற்றிருக்க அவசியமில்லை என்ற சட்டத் திருத்தையும் அரசு கொண்டு வந்துள்ளது. இதுவும் சுற்றுச்சூழல்  சீர்கேட்டிற்கு வழிகுக்கும் ஒன்றாகும். மேலும் ஏலத்தில் எடுக்கும் நிறுவனங்கள் சட்ட விதிமீறலில் ஈடுபட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய எந்த அறிவிப்பும் மத்திய அரசிடம் இல்லை என்பது பிரச்னைக்குரியதாகும்” என்கிறார்  ஆர்.ஸ்ரீதர்.

தொடர்ச்சியாக காடுகள்  குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் FERN அமைப்பின் "Double Jeopardy: Coal's threat to Forests" என்கிற அறிக்கையின்படி இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி வளர்ச்சியால் 2,50,000 ஹெக்டேர் பரப்பளவு  காடுகள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாகவும் குறிப்பாக இந்தியாவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலக்கரியில் பாதி அளவு வனப்பரப்பிற்கு கீழே இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

இந்த நிலையில் கூடுதலாக 500 கனிம சுரங்கங்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக தெரிவித்திருப்பதன் மூலம் இன்னும் பல ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படும். பல வனவுயிர்களின் வாழ்விடங்கள் துண்டாடப்படும். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு zoonotic spillover நடைபெற்று பல புதிய நோய் தொற்று ஏற்படும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் நிலம், நீர், காற்று, வனம், கடல் ஆகியவற்றை பாதுகாக்க பல்வேறு நல்ல சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் கூட கடந்த 6 ஆண்டுகளில் இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே சீர்குலையும் அளவிற்கு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இருக்கின்ற சில சட்டங்களை அமலாக்குவதிலும் சுற்றுச்சூழல் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதிலும் பெரிய அளவில் குறைபாடுகள் நிலவுகிறது. இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்களை மீறி சூழலுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்திய பல்வேறு நிறுவனங்களில் Coal India ltd-ம் ஒன்று.

2019ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ‘Assessment of Environmental Impact due to Mining Activities and its Mitigation in Coal India Limited and its Subsidiaries’ என்கிற சி.ஏ.ஜி.யின் அறிக்கை Coal India Limited நிறுவனம் செய்த பல்வேறு சுற்றுச்சூழல் சட்ட விதிமீறல்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிக்கொண்டு வந்தது. CIL நிறுவனத்தால் நடத்தப்படும் 41 நிலக்கரி சுரங்கங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.

12 சுரங்கங்களில் காற்று மாசை அளவிடக் கூடிய கருவிகள் 98ஆக இருக்க வேண்டிய நிலையில் 58 கருவிகள் மட்டுமே இருந்தது. அவற்றில் பதிவான காற்று மாசு அளவீடுகளும் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருந்தது. எட்டு சுரங்கங்களில் தண்ணீரில் கடுமையான மாசுபாடு கண்டறியப்பட்டது. 2012 முதல் 2018 வரையிலான காலத்த்ல் மட்டும் 62 லட்சம் கிலோ லிட்டர் நச்சு வாய்ந்த தண்ணீர் சுத்திகரிப்பு செய்யாமல் நீர் நிலைகளில் விடப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அளவிற்குதான் இந்தியாவில் நிலக்கரி சுரங்க உற்பத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் உள்ளது. இந்த நிலையில் ஏற்கெனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டங்கள் மறும் அதன் அமலாக்கத்தில் போதாமை நிலவுகிற வேளையில் பாக்சைட் மற்றும் நிலக்கரி எடுப்பதற்கான ஏலம் சேர்ந்து வழங்கப்படும் என்ற அறிவிப்பு மேலும் சுற்றுச்சூழல் சட்டங்களை நீர்த்துபோக செய்ய வழிவகுக்கும் என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

இதுகுறித்து பேசுகையில்  ”தற்போது செயல்பட்டும் வரும் சுரங்கங்கள் பல்வேறு வகையான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பதற்கு ஆதாரங்கள் பல இருக்கின்றன. CIL  சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமலே பல சுரங்கங்களை நடத்தி வந்ததாக CAG அறிக்கையிலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  தற்போது வரை நிலக்கரிக்கும் பாக்சைட்டிற்கும் தனித்தனியான நடைமுறையில்தான் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படுகிறது.  இவை இரண்டும் கூட்டு ஏலத்தில் விடப்பட்டால் இரண்டிற்கும் ஒரே சுற்றுச்சூழல் அனுமதி போதுமானது என்கிற வகையில் சட்டம் எதிர்காலத்தில் திருத்தம் செய்யப்படும்.  இந்த போக்கு சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தானதாகும் என்று கூறினார்.

மற்றுமொரு பிரச்னைக்குரிய அறிவிப்பாக பார்க்கப்படுவது நிலக்கரி படிவ மீத்தேன்(Coal Bed Methane Extraction) எடுப்பதற்கான ஏலம். நிலப்பரப்பிலிருந்து மிகக் குறைந்த ஆழங்களில் நிறைந்திருக்கும் நிலக்கரிப் படிவங்களில் உறைந்துள்ள இயற்கை வாயுவைப்  பூமிக்குள் துளையிட்டு ரசாயனங்கள் கலந்து நீரை உயர் அழுத்ததில் செலுத்தி, நிலக்கரிப் படிவங்களில் விரிசல் ஏற்படுத்தி, அவற்றுக்கிடையே சிக்கியுள்ள வாயுவை எடுப்பதையே நிலக்கரிப் படிவ மீத்தேன் எடுப்பு என்கிறார்கள். நீரியல் விரிசல்(Hydraulic fracturing) முறையை பயன்படுத்தி மீத்தேன் எடுக்கப்படும்.

இங்கிலாந்தில் லங்காஷயர் பகுதியில் குவாட்ரில்லா என்ற நிறுவனம் நீரியல் விரிசல் முறையைப் பயன்படுத்தி ஹைட்ரோகார்பன் துரப்பன பணிகளை மேற்கொண்டு வந்ததால் இப்பகுதியில் அடிக்கடி சிறிய அளவிலான நில நடுக்கங்கள் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த  2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்த தற்காலிக தடையை இங்கிலாந்து அரசு விதித்தது.

இப்படியாக உலக நாடுகள் பலவும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படுக்கிற பாதிப்புகளை மட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னோக்கி நடக்கையில் இந்திய அரசு சுற்றுச்சூழல் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்து தொடர்ச்சியாக வன வளங்களையும், வனவுயிர் வாழ்விடங்களையும் அழிக்கும் வகையிலான செயல்பாடுகளை செய்து பின்னோக்கி நடக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் பாரிஸ் ஒப்பந்தந்தின் படி இந்தியா ஒப்புக்கொண்ட இலக்குகளை அடைய முடியாமல் போகும் என்றே ஆய்வாளர்கள் பலரும் கருதுகின்றனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

First published:

Tags: Coal