மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர், பெங்களூருவை சேர்ந்த திஷா ரவி என்ற மாணவி, கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை ஒரு போராட்ட குழு சார்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பெங்களூரு வந்த டெல்லி காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
போராட்டங்களை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்த டூல் கிட்டை பகிர்ந்ததாகவும், காலிஸ்தான் அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தநிலையில், இந்நிலையில் ஜாமின் கோரி திஷா தரப்பு பாட்டியாலா நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கூடுதல் நீதிபதி தர்மேந்திர ராணா, திஷா ரவிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கினார். திஷா ரவி 1 லட்சம் ரூபாய் ஜாமின்தொகை செலுத்தவும் 2 பேர் உறுதிக்கடிதம் அளிக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக, திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதிலுமிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்