• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

கோப்புப்படம்

கோப்புப்படம்

மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள இந்த வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் முறையான இறுதித் தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தட பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் 821 ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஏ.டி.என்.ராவ் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானைகள் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு விடுதி உணவகங்கள் உள்ளிட்டவை கட்டப்படுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது. மேலும் யானைகள் வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து அவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்டோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நாடு முழுவதும் யானைகள் வழித்தடத்தில் கட்டுமான பணிக்கு தடை கோரி ரங்கராஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியாளர் இன்னசென்ட் திவ்யா தாக்கல் செய்த அறிக்கையில் யானைகள் வழித்தடத்தில் 39 ரிசார்ட்டுகள் இருப்பதாகவும் அவற்றில் உணவகம், தங்கும் விடுதி உள்ளிட்ட தனித்தனியாக 309 கட்டடங்கள் இருப்பதாகவும் 390 வீடுகள், பொதுக் கழிப்பிடம், தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்ட 27 ஆக்கிரமிப்புகள், 9 தேயிலைத் தோட்டங்கள், 77 விளைநில ஆக்கிரமிப்புகள், மற்றும் 9 இதர கட்டுமான ஆக்கிரமிப்புகள் என ஒட்டுமொத்தமாக 821 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக செயல் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அச்சமயத்தில் வழக்கு விசாரணையின் போது ஆஜராகாத 27 ரிசார்ட் வளாகங்களை 48 மணி நேரத்தில் பூட்டி சீல் வைக்க வேண்டும் எனவும் உரிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் மீதமுள்ள 12 ரிசார்ட் வளாகங்களுக்கும் சீல் வைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தொடர்ந்து 27 ரிசார்ட்டுகளில் உள்ள 275 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் நீலகிரி மாவட்ட ஆட்சியாளரால் சமர்ப்பிக்கப்பட்ட யானைகள் வழித்தட பாதுகாப்பு செயல் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஏ.டி.என்.ராவ் என்ற மூத்த வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவின்படி விரிவான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஏ டி என். ராவ் கடந்த 8- தேதி உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அந்த அறிக்கையில், யானை வழித்தடப் பகுதியில் கட்டடங்கள் கட்டுவதற்கு தடை விதித்து 2011-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் நிராகரிக்க வேண்டும்.

நீலகிரி மாவட்ட ஆட்சியாளரால் சமர்ப்பிக்கப்பட்ட யானை வழித்தடம் பாதுகாப்பதற்கான செயல்திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் நிராகரிக்க வேண்டும்.

தமிழ்நாடு தனியார் வனப்பாதுகாப்பு சட்டம், வனப்பாதுகாப்புச் சட்டம் 1980, ஆகிய சட்ட விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை சீல் வைத்து இடிக்கவும் அப்பகுதியில் போடப்பட்டிருக்கும் வேலிகளை அகற்றவும் அப்பகுதியில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை வெளியேற்ற மாவட்ட ஆட்சியாளருக்கு உத்தரவிட வேண்டும்.

தேயிலைத் தோட்டங்களில் உள்ள வீடுகளை சுற்றுலா பயணிகள் தங்கும் இடமாக சட்டவிரோதமாக பயன்படுத்துவோர் குறித்து ஒரு மாதத்திற்குள் மாவட்ட ஆட்சியாளர் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்.

யானை வழித்தட பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் சமூக ரீதியில் பின்தங்கிய 186 நபர்களுக்கான மறுவாழ்வு திட்டத்தை மூன்று மாதத்திற்குள் தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொலைபேசி வாயிலாக நீலகிரி மாவட்ட ஆட்சியாளர் இன்னசென்ட் திவ்யா அளித்த தகவலில் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முழுமையாக செயல்படுத்தி உள்ளதாகவும் யானை வழித்தட பகுதிகளில் அமைந்திருக்கும் பழங்குடி இன மக்களின் சிறு குடியிருப்புகளால் யானைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதால் அவர்களை வெளியேற்றவோ அவர்களின் குடியிருப்புகளை அகற்றவோ விலக்கு அளிக்குமாறு ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள இந்த வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் முறையான இறுதித் தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Prabhu Venkat
First published: