Ki Rajanarayanan : சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார் - ரவிக்குமார் எம்.பி இரங்கல்

எழுத்தாளர் கி.ராஜநாராயணன்

ஒரு கணம் மனம் திகைத்தது. படைப்பாளிக்கு ஏது மரணம்? என எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன் என ரவிக்குமார் எம்.பி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் (99) வயது முதிர்வு மற்றும் உடல்நிலை பாதிப்பால் காலமானார். லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்படும் அவரது உடல் நாளை (18ம் தேதி) மாலை கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்படுகிறது.

    அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள ரவிக்குமார் எம்.பி,கி ரா அண்மைக் காலமாக உற்சாகத்தோடு இயங்கிவந்த செய்திகளைப் பார்க்கிறபோதெல்லாம் அவரைப் போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வரவேண்டும் என நினைப்பேன். ஆனால் ஊர் ஊராகத் திரியும் நம்மால் அவருக்கு கொரோனா தொற்று வந்துவிடக்கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வில் போகாமல் தவிர்த்துவிடுவேன்.

    இரண்டொரு மாதங்களுக்கு முன்பு அவர் நோய்வாய்ப்பட்டபோது ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்று அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துவிட்டு வந்தேன். கடந்த இரண்டு மூன்று நாட்களாக மீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லை. நேற்று முன்தினம் நண்பர் சமஸ் தொடர்புகொண்டு யாரேனும் மருத்துவரை அவரது வீட்டுக்குச் சென்று பார்க்கச்சொல்ல முடியுமா எனக் கேட்டார். கொரோனா நெருக்கடியில் ஏதும் செய்ய முடியவில்லை. ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கும் இயலாத நிலை.



    சற்றுமுன்னர்தான் அவரது மறைவுச் செய்தி கிடைத்தது. அதை உறுதிசெய்துகொள்ள பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்களுக்கு போன் செய்தேன். அவர் சென்னையில் இருப்பதாகச் சொன்னார். ‘100 வரை இருப்பார்னு நெனச்சேன். ஜூன் வந்தால் 99 பிறக்கிறது’ என்றார். நீண்டகாலம் வாழ்ந்திருந்த தமிழ் எழுத்தாளர் அவராகத்தான் இருப்பார். அதுவும் கடைசி நாள்வரை நினைவு தப்பவில்லை. அதுதான் மிகப்பெரிய கொடுப்பினை.

    Must Read : தன் படைப்பின் உரிமையை வாசகருக்கும் பகிர்ந்த கி.ராஜநாராயணன்!

     

    சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கி ரா வும் நானும் பல விஷயங்களைப்பற்றி உரையாடினோம். அது பேட்டி அல்ல உரையாடல் என்றுதான் சொல்லவேண்டும். அதை இளவேனிலை வைத்து வீடியோவாகப் பதிவு செய்தார். இன்னும் பலரோடும் அப்படி உரையாடி பதிவு செய்தார் எனக் கேள்விப்பட்டேன். தனது மறைவுக்குப் பிறகுதான் அவற்றை வெளியிடவேண்டும் என அவர் கூறிவிட்டார்.



    அவரது மறைவுச் செய்தி கிடைத்ததும் கி ரா வுக்கும் மரணம் வருமா என ஒரு கணம் மனம் திகைத்தது. படைப்பாளிக்கு ஏது மரணம்? என எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன். மற்ற நாட்களாக இருந்திருந்தால் நாளை ஆயிரம் ஆயிரமாய்த் திரண்டிருப்பார்கள். லாக் டவுன் காலத்தில் பாரதிக்கு நேர்ந்தது போல சிலபேர் மட்டும் சூழ்ந்திருக்க அவரது இறுதிப்பயணம் நடக்கவேண்டும் என இயற்கை விதித்துவிட்டது போலும் என இரங்கல் தெரிவித்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published: