ஆந்திராவில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி சார்ஜ் செய்தபோது பேட்டரி வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 2 குழந்தைகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன்பாக தெலங்கானாவில் இ-பைக் பேட்டரி வெடித்து சிதறி ஒருவர் பலியான நிலையில் தற்போது ஆந்திராவில் இப்படியொரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் நேற்று எலக்ட்ரிக் பைக்கை வாங்கியுள்ளார். அதில் உள்ள பேட்டரி தனியாக எடுத்து வீட்டில் நேற்று சார்ஜ் செய்யத் தொடங்கிய சிவக்குமார் ஒரு கட்டத்தில் அசந்து தூங்கி விட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் பலத்த சத்தத்துடன் பேட்டரி வெடித்து சிதறியது. இதனால் வீட்டின் சில பகுதிகளும் தீப்பிடித்து எரிந்தன.
இதையும் படிங்க - சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய ஐடி பெண் ஊழியர்... அடுத்து நடந்த விபரீதம்
வீட்டில் உள்ளவர்கள் எழுப்பிய அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து, படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிவக்குமார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவரது மனைவியும், 2 குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிவக்குமார் பைக் வாங்கியதற்கான ஆவணங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் கடந்த 19-ம்தேதி இதேபோன்ற சம்பவம் நடந்தது. அங்கு இ-பைக்கின் பேட்டரிக்கு சார்ஜ் போடப்பட்டுக் கொண்டிருந்தபோது வெடித்து விபத்து ஏற்பட்டதில் 80 வயது முதியவர் உயிரிழந்தார்.
இதையும் படிங்க - சென்னை, தெலங்கானா விபத்தை தொடர்ந்து 2000 எலக்டரிக் பைக் வாபஸ்
இந்த சம்பவத்தை தொடர்ந்து விபத்துக்குள்ளான பியூர் ஈவி நிறுவனம் தனது 2 ஆயிரம் பைக்குகளை திரும்பப் பெறுவதாக கூறியுள்ளது.
குறைபாடுடைய அனைத்து மின்சார வாகனங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இ பைக்குகள் தொடர்ந்து விபத்தை சந்திப்பதுடன் உயிர்ப்பலி வாங்கி வருவதால் இதனை வாங்குவதா அல்லது வேண்டாமா என்ற மனநிலைக்கு வாடிக்கையாளர்களில் சிலர் வந்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.