• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தேர்தல் நிதி பத்திரங்களில் வெளிப்படை தன்மை தேவை - நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

தேர்தல் நிதி பத்திரங்களில் வெளிப்படை தன்மை தேவை - நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

  • Share this:
    அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான தேர்தல் நிதிப் பத்திர விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதில், வெளிப்படைத்தன்மை கோரி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த சில நாட்களாக தேர்தல் நிதிப் பத்திர முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தொடர் அமளியில் ஈடுபட்டு வருகிறது.

    ரொக்க நன்கொடைகளை தவிர்த்து வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் நோக்கில் பத்திரங்களை மத்திய அரசு 2018 ஜனவரியில் அறிமுகப்படுத்தியது.

    அதன்படி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தனிநபரோ, பெரு நிறுவனங்களோ பாரத ஸ்டேட் வங்கியில் ஆயிரம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரையில் பத்திரங்களை வாங்கி, தேர்தல் நன்கொடைக்கென அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.

    இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது அரசியல் கட்சிகளுக்கு நிதிப் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    தேர்தல் நிதிப் பத்திரம் திட்டத்தின் கீழ், 6000 கோடி ரூபாய் அளவிற்கு நன்கொடைகள் குவிந்ததாக அதில் பெரும்பகுதி பாஜக-வுக்கு சென்றதாகவும் அண்மையில் தகவல் வெளியானது.

    ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதால் தேசிய வங்கியின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பலன்கள் பறிபோகும் என்றும் கூறி 2017ல் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதிய தகவலும் வெளியானது.

    டிஜிட்டல் முறையில் பத்திரங்களை விநியோகித்தால் முறைகேடுகளைத் தடுக்கலாம் என்ற அவரது பரிந்துரையும் ஏற்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

    இதில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாகவும், ஆளும்கட்சியை பெருநிறுவனங்கள் கட்டுப்படுத்தும் நிலை உருவாகியிருப்பதாகவும் கூறி நாடாளுமன்றத் தொடர் துவங்கியது முதல் இரு அவைகளிலும் காங்கிரஸ் இப்பிரச்னையை எழுப்பி வருகிறது.

    இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானங்களை தந்த காங்கிரஸ். கூட்டு நாடாளுமன்ற குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனக் கூறி சோனியா தலைமையில் மக்களவையில் நேற்று வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வெளியிடுவதில் வெளிப்படைத்தன்மை கோரி நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே சசி தரூர், மணிஷ் திவாரி மற்றும் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    6000 கோடி ஊழல் என்றும், இது குறித்து பிரதமர் பதில் அளிக்கவேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.

     

    முன்னதாக இது குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், நன்கொடைகளை நேர்மையாக பெறாதவர்களே தேர்தல் பத்திரங்களை எதிர்ப்பதாகவும் நன்கொடைகளில் கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டதால் காங்கிரஸ் எதிர்ப்பதாகவும் விளக்கம் அளித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: