Election Results 2021 | 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு அமித் ஷா முழுப் பொறுப்பேற்பாரா?- பதற்றத்துடன் காத்திருக்கும் பாஜக

அமித் ஷா

இந்த ஐந்து மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவும் சூறாவளிப் பிரச்சாரம் செய்திருந்தனர்.

  • Share this:
    தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் ஞாயிறன்று (2-5-21) வெளியாகின்றன. கொரோனாவையும் மீறி இந்த 5 மாநில தேர்தல்களே முக்கியம் என்று பாஜக செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் முதல் கொரோனா நிபுணர்கள், தன்னார்வலர்கள் என்று பலரும் விமர்சனத்தை முன்வைத்தனர்.

    எனவே இந்த 5 மாநில தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அமித் ஷா பொறுப்பேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த ஐந்து மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவும் சூறாவளிப் பிரச்சாரம் செய்திருந்தனர்.

    மேலும் ஐந்து மாநிலங்களுக்கும் தனித்தனியாக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களை அமர்த்தியிருந்தது. இவர்கள் மீது பாஜகவின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டாவை விட உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகமானக் கவனம் செலுத்தினார்.

    இந்தத் தேர்தலில் பாஜகவிற்கு கிடைக்கும் முழு வெற்றிக்கான காரணகர்த்தாவாக அமித்ஷா கருதப்படுவார் எனத் தெரிகிறது. அதேசமயம், இவற்றில் தோல்வி ஏற்பட்டால் அதன் பொறுப்பை அமித்ஷா ஏற்பாரா? எனும் கேள்வியும் எழுந்துள்ளது.

    அசாமிலும் மேற்கு வங்கத்திலும் வெற்றி பெற்றால் அது முழு பெருமையும் அமித் ஷாவையே சாரும் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. உள்துறை அமைச்சராக இருந்தாலும் அமித் ஷா கட்சி நடவடிக்கைகளில்தான் அதிகக் கவனம் செலுத்தினார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே பாஜகவில் பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில் அமித் ஷா இருக்கிறார்.

    ஆனால் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அமித் ஷா பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை, ஒதுங்கியிருந்தார், காரணம் அங்கு வெற்றி உறுதியல்ல என்று அவருக்கு தகவல் போனதையடுத்து ஒதுங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பீகார் வெற்றிக்குப் பிறகு நட்டாவை அமித் ஷாவே புகழ்ந்தார்.

    இந்நிலையில் மேற்கு வங்க வெற்றிய அமித் ஷா, மோடி, மற்றும் பாஜக வெகு ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

    கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு சற்று முன்பாக பாஜக கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சியை இழந்தது. பிறகு அதே வருடத்தில் மகராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களிலும் ஆட்சியைத் தவற விட்டது.

    ஹரியானாவில் தனது ஆட்சியை தக்கவைக்க பாஜக கடினமான சூழலை சந்திக்க நேர்ந்தது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக தோல்வி அடைந்தது.

    இந்த முறை மேற்கு வங்கத்தில் பாஜக தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் செலவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டது. திரிணாமூல் கட்சியினரை தங்கள் கட்சிக்க்குள் இழுத்து அரசியல் செய்தது. மம்தா பானர்ஜி இவர்களது அரசியலை அவ்வப்போது அம்பலப்படுத்தினாலும் திரிணாமூல் ஆட்சியின் மீதும் மக்களுக்கு அதிருப்தி இருந்தது. ஆனால் அது பாஜகவின் வெற்றியாக மாறுமா என்பதில் உறுதியில்லை. பழங்குடி பெல்ட் வாக்குகளில் பாஜக பெருமளவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது போக கூட்டம் என்று பார்த்தால் பாஜகவுக்கு மோடியைத் தவிர பெரிய கூட்டம் மற்றவர்களுக்கு வரவில்லை என்றார் பிரசாந்த் கிஷோர். இடது-காங்கிரஸ் கூட்டணிக்கும் நல்ல கூட்டம் வந்தது.

    இந்நிலையில் பாஜகவின் தேர்தல் உத்தி வகுத்தல்களுக்கு பெரிய சோதனைக்கூடமாக மேற்கு வங்கம் மாறியுள்ளதால் இன்றைய முடிவுகளை பாஜகவினர் கைவிரல் நகங்களை கடித்துத் துப்பியபடி ஆவலுடனும் பதற்றத்துடனும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
    Published by:Muthukumar
    First published: