• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Election results 2021 | 3 மாநிலங்களில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட ஆளுங்கட்சிகள்; 2 மாநிலங்களில் ஆட்சி மாற்றம்!

Election results 2021 | 3 மாநிலங்களில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட ஆளுங்கட்சிகள்; 2 மாநிலங்களில் ஆட்சி மாற்றம்!

5 மாநில தேர்தல்

5 மாநில தேர்தல்

இந்தியாவில் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில், அசாம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 3 மாநிலங்களிலும், ஆட்சி செய்து வந்த அதே கட்சிகளே ஆட்சியை தக்க வேத்து மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளன.

  • Share this:
    இந்தியாவில் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில், அசாம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 3 மாநிலங்களிலும், ஆட்சி செய்து வந்த அதே கட்சிகளே ஆட்சியை தக்க வைத்து மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளன. ஆனால், புதுச்சேரி, தமிழகத்தில் உள்ளிட்ட இரண்டு மாநிலங்களில் மட்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது.

    இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அசாமில் 3 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் உட்சபட்சமாக 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

    இந்நிலையில், மே.2ம் தேதியான இன்று 5 மாநிலங்களிலும் விறுவிறுப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தேர்தல் நடைபெற்ற இந்த ஐந்து மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவும் சூறாவளிப் பிரச்சாரம் செய்திருந்தனர்.

    இவற்றில் குறிப்பாக மேற்குவங்கம், அசாமிலும் ஆட்சியை பிடிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிக கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது. அசாமில் ஏற்கனவே பாஜக தான் ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளிலும், பாஜக பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. அசாம் மாநிலத்தில் மொத்தமாக 126 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சி அமைக்க 64 இடங்களை கைப்பற்ற வேண்டும்.

    இந்நிலையில், அசாமில் 126 சட்டபேரவைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சமீபத்திய நிலவரப்படி பாஜக 78 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், அசாமில் பாஜக மீண்டும் ஆட்சியைமக்கும் சூழல் உருவாகியுள்ளது. அங்கு காங்கிரஸ் 47 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

    இதேபோல், கேரளாவில் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்கிடையே போட்டி நிலவுகிறது. கேரள மாநிலத்தை பொறுத்தவரையில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி மாறி மாறி ஆட்சியில் அமர்கின்றனர். இந்த இரண்டு கட்சிகளுக்கிடையேதான் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    இந்தியாவில் கம்யூனிஸ்ட் ஆளும் கடைசி மாநிலமாக கேரளா இருந்து வருகிறது. அப்படி இருக்க கேரளாவில் தோல்வியுற்றால், அந்த மாநிலமும் அவர்களின் கையைவிட்டுப்போய்விடும். இதுதான் கம்யூனிஸ்ட்களின் நிலை. இதனிடையே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிவித்தன.

    அதன்படி, தற்போதைய நிலவரங்களின் படி கேரளாவின் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் இடது ஜனநாயக முன்னணி 90 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக முன்னணி 47 இடங்களிலும் பாஜக தலைமை என்.டி.ஏ 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. அதன்படி, கேரளாவில் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

    தொடர்ந்து, மேற்குவங்கத்தில், 10 ஆண்டுகளாக அங்கு மம்தா முதலமைச்சராக உள்ளார். அதனால், இந்த முறை மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என தீவிரமாக அக்கட்சி முயற்சித்து வந்தது. இதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்குவங்கத்தில் கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டார். எனினும், எதுவும் பலனிக்கவில்லை என தெரிகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 182 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 74 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. இதனால், மேற்குவங்கத்தில் மீண்டும் மம்தா ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

    5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில், அசாம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 3 மாநிலங்களிலும், ஆட்சி செய்து வந்த அதே கட்சிகளே ஆட்சியை தக்க வேத்து மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளன. ஆனால், புதுச்சேரி, தமிழகத்தில் மட்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது.

    அதன்படி, புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதியில் 20 முதல் 24 தொகுதிகளை என்.ஆர்.காங்கிரஸ் கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் தெரிவித்திருந்தன. அதேபோல், தற்போதய நிலவரப்படி, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், அங்கு என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

    தமிழகத்தில் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்து வருகிறது. இதனால், இந்த முறை ஆட்சியை பிடிக்க கடுமையாக முயற்சித்தது. அந்தவகையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளின் படி, திமுக தனிப்பெரும்பான்மையுடன் 180 தொகுதிகளில் வெற்றி பெரும் என கணிக்கப்பட்டன. அதிமுக 45 முதல் 50 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் பெரும்பாலான கருத்துகணிப்புகள் கணித்திருந்தன. எனினும், தற்போதைய சூழலில், அதிமுக 70க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

    திமுக 140க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தனிப் பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பின்னர் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: