• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இனி வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்: ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வரும் தேர்தல் ஆணையம்!

இனி வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்: ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வரும் தேர்தல் ஆணையம்!

 இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்லாமல் வீட்டிலிருந்து இனி வாக்களிக்க வசதியை ஏற்படுத்தித் தரும் இ-வோட்டிங் எனும் தொழில்நுட்பத்தை மெட்ராஸ் ஐஐடி உடன் இணைந்து உருவாக்கி வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
இந்தியாவில் வாக்குப்பதிவானது வாக்கு சீட்டு முறையில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்ற டெக்னாலஜியை அடைந்திருக்கிறது. இனி இ-வோட்டிங் எனப்படும் மின்னணு முறைக்கு மாற உள்ளது. இதற்கான சோதனை கட்டங்கள் விரைவில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் முறையையே அடியோடு மாற்றியமைக்கும் வகையில் மின்னணு முறையில் வாக்கு செலுத்தும் தொழில்நுட்பத்தை மெட்ராஸ் ஐஐடி உடன் இணைந்து உருவாக்கி வருவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் பயிற்சி எடுத்துவரும் இளம் காவல் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய சுனில் அரோரா அவர்கள் மத்தியில் பேசுகையில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்பது ஆசையாகத்தான் இருக்கிறது, ஆனால் அது சாத்தியமாகவேண்டும் என்றால் அனைத்து கட்சியினரின் ஒருமித்த ஆதரவை பெற்று சட்ட திருத்தங்கள் செய்தால் மட்டுமே நடக்கும்.

பொதுமக்கள் வாக்களிப்பதற்காக மொபைல் செயலி வழியில் இ-வோட்டிங் முறை குறித்து கேள்வி எழுந்த போது பதிலளித்த சுனில் அரோரா, “தேர்தல் ஆணையம் சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் மற்றும் முக்கியமான விஞ்ஞானிகளுடன் இணைந்து பிளாக்செயின் திட்டம் ஒன்றை உருவாக்கி வருகிறோம். இதன் அடிப்படையிலான இ-வோட்டிங் முறையானது 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதை நீங்கள் பார்க்க முடியும்.” என்றார்.

மேலும் ஆதார் கார்டுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்து புதிய தேர்தல் சீர்த்திருத்தை கொண்டுவருவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தேர்தல் முறையின் அடிப்படையை தெரிந்துகொள்வதற்காக பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் தேசிய போலீஸ் அகாடமியின் முயற்சியையும் அவர் பாராட்டினார்.

தமிழ்நாடு தேர்தல் செலவீனங்கள் அதிகம் இருக்கும் மாநிலம் என்பதால் அங்கு அனுபவமிக்க தேர்தல் செலவீன பார்வையாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் வாக்குக்கு பணம் கொடுக்கப்படுகிறதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அரோரா தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: