ஹோம் /நியூஸ் /இந்தியா /

குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி எப்போது - தேர்தல் ஆணைையம் இன்று அறிவிப்பு

குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி எப்போது - தேர்தல் ஆணைையம் இன்று அறிவிப்பு

குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

தற்போதைய தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் ஜுலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் விரைவில் நிறைவடையும் நிலையில், புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் தேதி அறிவிப்பை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளது.

  இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. தற்போதைய தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் ஜுலை 24ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவர் தேர்வு செய்து பதவியேற்க வேண்டும். இந்தியாவில் குடியரசு தலைவரை மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்கிறார்கள்.

  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களான அனைத்து உறுப்பினர்களும், அதேபோல், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வார்கள். அதேபோல், மக்களவை, மாநிலங்களவை, சட்டபேரவை ஆகியவற்றில் நாமினேடட் உறுப்பினர்கள் எனப்படும் நியமன உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது.

  மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி யாரை வேட்பாளராக நிறுத்தும் என எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியலும் நிலவுகிறது. தற்போதைய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு குடியரசு தலைவர் வாய்ப்பு வழங்கப்படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவாகவே கருதப்படுகிறது. தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பட்டியல் சமூகப் பிரிவைச் சேர்ந்தவர் என்ற நிலையில்,புதிய குடியரசு தலைவர் வேட்பாளரை பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் அல்லது பெண் ஒருவராக இருக்கலாம் எனப் பேசப்படுகிறது. அல்லது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவருக்கு பாஜக கூட்டணி வாய்ப்பு வழங்குமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

  இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தலில் 16 இடங்களுக்கு கடும் போட்டி.. களைகட்டும் "கூவத்தூர் பாணி"

  பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தரப்போ யாரை வேட்பாளராக நிறுத்துவார்கள் என இதுவரை எந்த சமிக்ஞையும் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளை ஒன்று திரட்டி பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உள்ளனவா என்பது தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் விரைவில் தெரிய வரும்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Election commission of India, President