குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் அன்று நடைபெற்று முடிவுகள் வெளியிடப்படும். இந்த தேர்தலில் 776 எம்பிக்களும், 4,033 எம்எல்ஏக்களும் வாக்களிக்கவுள்ளனர். எனவே, தேர்தலுக்கான மொத்த வாக்களர் எண்ணிக்கை 4,809 ஆகும்.
தேர்தல் தொடர்பான முக்கிய தேதிகள்
குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தேதி - ஜூலை 18ஆம் தேதி
குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை - ஜூலை 21ஆம் தேதி
வேட்புமனு தாக்கல் தொடக்கம் - ஜூன் 15ஆம் தேதி
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் - ஜூன் 29ஆம் தேதி
வேட்புமனு திரும்பப் பெறும் கடைசி தேதி - ஜூலை 2ஆம் தேதி
தற்போதைய தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் ஜுலை 24ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவர் தேர்வு செய்து பதவியேற்க வேண்டும். இந்தியாவில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவரை மக்கள் நேரடியாக தேர்வு செய்யாமல், மக்கள் பிரதிநிதிகள் அவர்களை தேர்வு செய்கிறார்கள்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களான அனைத்து உறுப்பினர்களும், அதேபோல், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வார்கள். அதேபோல், மக்களவை, மாநிலங்களவை, சட்டபேரவை ஆகியவற்றில் நாமினேடட் உறுப்பினர்கள் எனப்படும் நியமன உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி யாரை வேட்பாளராக நிறுத்தும் என எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியலும் நிலவுகிறது. தற்போதைய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு குடியரசு தலைவர் வாய்ப்பு வழங்கப்படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவாகவே கருதப்படுகிறது.
தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பட்டியல் சமூகப் பிரிவைச் சேர்ந்தவர் என்ற நிலையில்,புதிய குடியரசு தலைவர் வேட்பாளரை பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் அல்லது பெண் ஒருவராக இருக்கலாம் எனப் பேசப்படுகிறது. அல்லது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவருக்கு பாஜக கூட்டணி வாய்ப்பு வழங்குமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:
100 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை Lipstick தாவரம்
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தரப்போ யாரை வேட்பாளராக நிறுத்துவார்கள் என இதுவரை எந்த சமிக்ஞையும் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளை ஒன்று திரட்டி பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உள்ளனவா என்பது இனிதான் தெரிய வரும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.