வாக்காளர் பட்டியலில் ஆண்கள், பெண்களைப் போலவே மூன்றாம் பாலினத்தவரையும் அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப சேர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் வாக்காளர் பட்டியலில் மூன்றாம் பாலினத்தவர்கள் மிகக் குறைவாகவே சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் மாநில பிரிவுகள் இதற்காக பிரத்தியேக முயற்சியை தற்போது கையில் எடுத்துள்ளது. அதன்படி, மூன்றாம் பாலினத்தவர்களையும் தேர்தல் நடைமுறைகளில் முழுமையாக பங்கேற்க வைக்க மகாராஷ்டிரா தேர்தல் ஆணையம் புதிய ஆய்வு நடத்த உள்ளது. இதன் படி, தகுதி கொண்ட மூன்றாம் பாலினத்தவர்கள் இருவருக்கு ஆண்டுதோறும் ரூ.1.50 லட்சம் உதவித் தொகை வழங்கி, அவர்கள் இந்த ஆய்வுப் பணியில் களமிறக்கப்பட உள்ளனர்.
இவர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்களின் மக்கள்தொகை, அவர்களின் வாழ்க்கை நிலை, அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அதை தீர்க்கும் வழிகள் ஆகியவற்றை கண்டறிந்து அவர்களையும் ஜனநாயக நடைமுறைகளில் விரிவாக பங்கேற்க வைக்க வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு அடிப்படை அரசு திட்டங்களான பொது விநியோகத் திட்டம், வீடு, மருத்துவ வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த சலுகைகளை பெற உரிய ஆவணங்களை அவர்களுக்காக உருவாக்கித் தர வேண்டும்.
இதையும் படிங்க:
மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க எம்.ஜி மோட்டார்ஸ், கேஸ்ட்ரோல் இங்க் நிறுவனங்களுடன் ஜியோ ஒப்பந்தம்
மூன்றாம் பாலினத்தவர்கள் அதிகம் கொண்ட மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் தேர்தல் ஆணையத்தின் பல்வேறு முயற்சிக்குப் பின்னரும், வாக்காளர் பட்டியலில் இதுவரை 3,520 மூன்றாம் பாலினத்தவர்கள் தான் பதிவு செய்துள்ளனர். எனவே, இவர்களை ஜனநாயக கடமைகளில் இருந்து தனித்து விடப்பட்ட காலத்தை மாற்றி, அவர்களையும் உள்ளடக்கிய தேர்தல் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும். இதை இலக்காகக் கொண்டே இந்த ஆய்வு பணி நடைபெற உள்ளது என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.