2012 தேர்தலில் மிகப்பெரிய வெற்றி.. 38 வயதில் முதலமைச்சர்.. பின்னர் படுதோல்வி என அரசியல் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தவர் அகிலேஷ் யாதவ். பா.ஜ.க.வின் பெரும் பிரச்சார நிதி, பிரதமரின் கவர்ச்சியான பேச்சு, ஒரு டஜன் மத்திய அமைச்சர்கள், கட்சியின் தீவிர வியூகவாதி அமித் ஷா. என தற்போதைய தேர்தலில் அகிலேஷ் எதிர்கொண்ட சவால்கள் ஏராளம். ஆனால் மேற்கு வங்கத்தில் இதே சவால்களை எதிர்கொண்ட மம்தா பானர்ஜி, கருத்துக் கணிப்புகளை சுக்கு நூறாக்கி, மூன்றாவது முறையாக முடி சூடினார். மம்தாவின் சாதனையை தான் உத்தர பிரசேததில் நிகழ்த்துவேன் என பரப்புரைகளின் போது கூறி வந்தார் அகிலேஷ்.
விஜய் யாத்ரா என பெயரிடப்பட்டு, உத்தர பிரதேசத்தின் கிழக்கு, மத்திய மற்றும் பன்டல்காண்ட் பகுதிகளில் அகிலேஷ் யாதவ் நடத்திய 8 கட்ட பேரணிகள் பெரும் கூட்டத்தை கூட்டின. ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டதையே இப்பெருங் கூட்டங்கள் உறுதிப்படுத்துவதாக சமாஜ் வாடி கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் சாதி பிரிவுகள் நீக்கமற நிறைந்துள்ள உத்தர பிரதேச அரசியலில், மக்கள் கூட்டம் வெற்றிக்கான எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. 2017- தேர்தலின் போது மக்கள் வெள்ளத்தில் மிதந்த மாயாவதி, யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரும் தோல்வியை கண்டதே இதற்கு உதாரணம்.
Also Read: உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆட்சி அமைக்கப் போவது யார்.? இன்று வாக்கு எண்ணிக்கை
உத்தர பிரதேசத்தில் மூன்று முறை முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த அகிலேஷின் தந்தை முலாயம் சிங், தனது மகனுக்கு சில கணக்குகளை போட்டு கொடுத்துள்ளார். அதன் படி சமாஜ் வாடி கட்சிக்கான பாரம்பரிய இஸ்லாமிய வாக்குகளுடன் யாதவர்கள் அல்லாத பிற பிற்படுத்தப்பட்டவர்கள் வாக்குகளை குறி வைத்து காய் நகர்த்தினார். இதன் விளைவாகவே அவர், பெரிய கட்சிகளை புறம் தள்ளி சுஹேல்தேவ் ராஜ்பாரின் பாரதிய சமாஜ் கட்சி (SBSP), அபான தளம், அப்னா தளம் (S), நிஷாத் கட்சி உள்பட 12 சிறு கட்சிகளை கூட்டு சேர்த்துள்ளார். இதன் மூலம் 30 சதவிகித வாக்குகளை அறுவடை செய்யலாம் என்பது அகிலேஷின் கணக்கு. மேலும், பட்டியலினத்தவர்களுக்கு சலுகைகள் வழங்கவில்லை என கூறி சில பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தேர்தலுக்கு முன்னர் சமாஜ் வாடி கட்சியில் இணைந்தனர், இதுவும் அகிலேஷ்-சுக்கான செல்வாக்கை சற்று அதிகரிக்கும் என நம்பப்படுகிறது..
பாஜக ஆட்சியின் ஐந்தாண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம், நிர்வாக சீர்கேடு, கொரோனா பெருந்தொற்றை கையாண்ட விதம், கங்கை ஆற்றில் ஆயிரக்கணக்கான உடல்கள் மிதந்த நிகழ்வு ஆகியவற்றை மையப்படுத்தி அகிலேஷ் யாதவின் பரப்புரை அமைந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் உ.பி-யில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என கூறும் நிலையில் சமாஜ் வாடி தலைமையிலான கூட்டணி 300 இடங்களை கைப்பற்றும் என அகிலேஷ் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் உண்மையாகுமா அல்லது அகிலேஷின் நம்பிக்கை நிதர்சனம் ஆகுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.