ரூ. 15 லட்சம் வங்கிக்கணக்கில் வந்ததா? ரேஷனில் அரிசி, பருப்பு இலவசம் என பாஜக பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது: மம்தா ஆவேசம்

பிரதமர் மோடி Vs மமதா பானர்ஜி

 “கடந்த முறை வாக்களித்தவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன், ஒவ்வொருவர் வங்கிக்  கணக்கிலும் பா.ஜ.க. ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று கூறினார்களே, பணம் வந்து சேர்ந்ததா?

 • Share this:
  ரூ. 15 லட்சம் வங்கிக்கணக்கில் வந்ததா? ரேஷனில் அரிசி, பருப்பு இலவசம் என பாஜக பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது என்று மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்தில்  மம்தா பாஜகவை எதிர்த்து ஆவேசமாகப் பேசினார்.

  தேர்தலின்போது உங்களுக்கு அரிசி, பருப்பு தருவோம் என பொய்யான வாக்குறுதிகளை அளித்து விட்டு, உங்களுடைய வாக்குகளை வாங்கி சென்று விடுவார்கள் என்று மம்தா பானர்ஜி பாஜக மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

  294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகின்றன.

  தேர்தலுக்கான பிரசார பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்காளத்தின் பாங்குரா நகரில் நடந்த பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,

  “கடந்த முறை வாக்களித்தவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன், ஒவ்வொருவர் வங்கிக்  கணக்கிலும் பா.ஜ.க. ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று கூறினார்களே, பணம் வந்து சேர்ந்ததா?

  தேர்தலின்போது உங்களுக்கு அரிசி, பருப்பு தருவோம் என பொய்யான வாக்குறுதிகளை அளித்து விட்டு, உங்களுடைய வாக்குகளை களவாடிச் சென்று விடுவார்கள்.

  மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்பே எடுத்து விட்டது.

  கிராமம், நகராட்சியில் 50 சதவீத இடஒதுக்கீட்டை நாங்கள் வழங்கி இருக்கிறோம். பஞ்சாயத்துகளிலும் 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் தாய்மார்களும், சகோதரிகளும் உள்ளனர்.

  பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் குழாய் வசதியை பாங்குராவில் எங்கள் ஆட்சிதான் செய்தது.

  பாஜக மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கப்பார்க்கிறது. இவர்கள் உருவாக்காததை இவர்கள் எப்படி விற்க முடியும்?” என்று சரமாரி கேள்வி எழுப்பினார்.

  மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திரிணாமுல் முன்னாள் தலைவர் சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: