கர்நாடகாவைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் ரூ.1 கோடி மதிப்பிலான தனது நிலத்தை அரசு பள்ளிக்காகவும் விளையாட்டு மைதானம் கட்டுவதற்காகவும் தானமாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாவரி மாவட்டத்தில் உள்ளது குனிகெரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான ஹுச்சம்மா சௌத்ரி தன்னிடம் உள்ள அனைத்தையும் இங்குள்ள குழந்தைகளின் படிப்பிற்காகவும் அவர்கள் விளையாடவும் தானமாக வழங்கியுள்ளார்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த பசப்பா சௌத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்ட இங்கு வந்த ஹுச்சம்மாவுக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் இருந்தது. தங்களது நிலத்தில் உழவு தொழில் பார்த்து இந்த தம்பதி வாழ்ந்து வந்தனர். நீண்ட காலம் ஆகியும் இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை.
இதனிடையே முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பசப்பா சௌத்ரி மரணமடைந்த நிலையில், ஹுச்சம்மா தனிமரமானார். எனினும், தனது நிலத்தில் தொடர்ந்து உழைத்து எளிமையான வாழ்க்கையை அவர் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், இந்த கிராமத்தில் உள்ள சிறுவர்கள் கல்வி கற்க பள்ளிக்கூடம் கட்ட சிலர் இடத்தை தேடி வருவது ஹூச்சம்மாவுக்கு தெரியவந்தது.
இதையும் படிங்க: கொரோனா தொற்று பரவல் பிப்.15ம் தேதிக்குப் பின் குறையத் தொடங்கும்.. மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
இதனையடுத்து தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கரை பள்ளி கட்டுவதற்கு தானமாக வழங்கினார். பின்னர், மாணவர்கள் விளையாட மைதானம் அமைப்பதற்காக பள்ளி நிர்வாகம் நிலம் தேடி வந்தனர். இதையடுத்து தன்னிடம் மீதமிருந்த ஒரு ஏக்கர் நிலத்தையும் மூதாட்டி தானமாக வழங்கினார். தற்போது அந்த பள்ளியிலேயே அவர் மத்திய உணவை சமைக்கும் வேலையை செய்து வருகிறார்.
பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டால் அடுத்தவர்களின் நிலத்தில் விவசாய கூலியாக அவர் பணியாற்றுகிறார். இது தொடர்பாக ஹூச்சம்மா கூறுகையில், எனக்கு குழந்தை இல்லை. ஆனால் இங்குள்ள அனைத்து குழந்தைகளும் என்னை ஆச்சி என்று அழைக்கின்றனர். தினமும் 300 குழந்தைகளுக்கு உணவு சமைத்து போடுவது மகிழ்ச்சியாக உள்ளது. 300 குழந்தைகள் நமக்கு என்று இருக்கும்போது ஒன்று இரண்டு குழந்தைகளுடன் ஏன் தன்னிறைவு அடைய வேண்டும் ‘ என்று கூறுகிறார்.
மேலும் படிக்க: அவமானப்படுத்திய சேல்ஸ்மேன்.. 1 மணி நேரத்தில் கார் ஷோரூமை மிரள வைத்த விவசாயி!!
அவர் தானமாக வழங்கிய நிலத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் நெறு கூறப்படுகிறது. நிலத்தின் மதிப்பு குறித்து தெரியுமா என்ற கேள்விக்கு, “என் தேவையெல்லாம், எனது பசியை போக்கிக்கொள்ளும் அளவுக்கான உணவுதான். அது எனக்கு கிடைக்கிறது. பணத்தை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன். இந்த குழந்தைகள் எப்போதும் என்னை நினைவில் வைத்துகொள்வார்கள். அது போதும் எனக்கு’ என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.