ஹோம் /நியூஸ் /இந்தியா /

டெல்லியில் இன்று அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி

டெல்லியில் இன்று அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி-அமித்ஷா

எடப்பாடி பழனிசாமி-அமித்ஷா

அதிமுக-பாஜக கூட்டணியை இறுதி செய்வது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது அதிமுக-பாஜக கூட்டணியை இறுதி செய்வது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக இன்று 12 மணியளவில் டெல்லி புறப்பட்டு சென்றார்.

  பிற்பகல் 2.45 மணிக்கு டெல்லி சென்றடையும் அவர், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்று தங்குகிறார். பின்னர், இரவு 7.30 மணியளவில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதிக்க இருப்பதாகவும், கூட்டணி குறித்து இறுதி செய்யும் முக்கிய முடிவு எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  மேலும் படிக்க.... ரஜினி ரசிகர்கள் அரசியலில் இறங்க வழிவகுத்த ரஜினி மக்கள் மன்றம்

  சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த அமித்ஷா, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் அந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது அதிமுக-பாஜக கூட்டணியை உறுதிசெய்து அதிமுக தலைவர்கள் இருவரும் அறிவிப்பை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  அமித்ஷாவின் சந்திப்பிற்குப் பிறகு தமிழ்நாடு இல்லத்திற்குச் சென்று ஓய்வு எடுக்கும் எடப்பாடி பழனிசாமி, நாளை காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் திட்டப்பணிகள் குறித்து பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். தமிழகத்திற்கு தேவையான நிதி உதவி தொடர்பான கோரிக்கை மனுக்களையும் முதலமைச்சர் அப்போது அளிக்க இருக்கிறார்.

  மேலும், வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் மெட்ரோ ரயில் இணைப்பு திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இந்த தொடக்க விழாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

  அத்துடன், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்காக கரூர்-புதுக்கோட்டை இடையே 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் தோண்டும் பணி நடைபெற உள்ளது. இதனை தொடங்கி வைக்கவும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி 1000 மெகாவாட் சூரிய வெப்ப மின்சார திட்டத்தை தொடங்கி வைக்கவும் பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  கங்கை நதியை சுத்தப்படுத்தியது போல, காவிரி நதியையும் சுத்தப்படுத்தி கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. ‘நடந்தாய்வாழி காவேரி’ என்கிற திட்டத்துக்கும் நிதி உதவியையும் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் கோர இருக்கிறார். இந்த அரசு முறை சந்திப்புகள் முடிந்த பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து பேசவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: AIADMK Alliance, Amith shah, CM Edappadi Palaniswami, TN Assembly Election 2021