2019 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகாவிகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்றுவந்தது. இந்நிலையில் 2022 ஜூன் மாதம், இந்த கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி சிவசேனா கட்சியின் முன்னணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கி ஆட்சியை கவிழ்த்தனர்.
கட்சியின் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு கொண்ட ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்து முதலமைச்சரானார். தற்போது கட்சியும் சின்னமும் யாருக்கு சொந்தம் என்ற சட்ட போராட்டம் உத்தவ் தாக்ரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இரு தரப்புக்கும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பெரும்பான்மை எம்எல்ஏக்கள் எம்பிக்கள் ஆதரவு அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியின் பெயும், சின்னமான வில் மற்றும் அம்பு ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தரப்பு பின்னடைவை சந்தித்துள்ளது. சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை உச்சநீதின்றம் ரத்து செய்து, 16 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யும் என்றும் கூறினார். மகாராஷ்டிராவில் மோடியின் பெயர் எடுபடாது என்பதை உணர்ந்து, தங்களது சொந்த ஆதாயத்துக்காக பால்தாக்கரேயின் முகமூடியை ஒரு சிலர் அணிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: போராட்டத்தில் பூத்த காதல்.. அரசியல் பிரமுகரை கரம் பிடித்த பிரபல பாலிவுட் நடிகை!
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்னதாக, தேர்தல் ஆணையம் தனது முடிவை தெரிவிக்கக் கூடாது என்று, தான் ஏற்கனவே கூறியதாகவும், எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை அடிப்படையில் கட்சியின் நிலையை முடிவு செய்வதாக இருந்தால், எந்தவொரு முதலீட்டாளரும் எம்பி, எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி முதலமைச்சர் பதவிக்கு வர முடியும் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
அதேநேரத்தில், தேர்தல் ஆணைய முடிவு குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நாடு இயங்கிவருவதாகவும், அந்த அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அரசை அமைத்ததாகவும் கூறினார்.தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு நன்றி தெரிப்பதாகவும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Shiv Sena, Uddhav Thackeray