துருக்கியில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் கோர தாண்டவத்தின் தாக்கம், 2 வாரங்கள் ஆகியும் குறையவில்லை. உலகில் அடிக்கடி நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் துருக்கியில், கடந்த 2020ல் ஏறக்குறைய 33 ஆயிரம் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் 332 நிலநடுக்கங்கள் மட்டும் ரிக்டர் அளவுகோலில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் பதிவாகி உள்ளது. யூரேசியா, ஆப்பிரிக்கா, அரேபியா புவித்தட்டுக்கு இடையே அமைந்துள்ள அனடோலியன் புவிதட்டில் துருக்கி உள்ளதும் அந்த அனடோலியன் புவிதட்டு மீது அரேபியன் புவி தட்டு நகர்வதும் இந்த நிலநடுக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், தொடர்ந்து இயக்கத்தில் உள்ள 8 பெரிய புவித்தட்டுகளில் ஒன்றான இந்திய பலகை, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 சென்டிமீட்டர் நகர்ந்து வருவதாக ஐதராபாத்தை மையமாகக் கொண்ட தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியும் நில அதிர்வு நிபுணருமான பூர்ணச்சந்திர ராவ் தெரிவித்துள்ளார். இது இமயமலையில் அழுத்தம் குவிவதற்கு வழிவகுப்பதாகவும் இதனால், வரும் நாட்களில் அதையொட்டிய பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், நில அதிர்வு ஏற்படக்கூடும் என்றும் அவர் விவரித்துள்ளார்.
இதனால், இமாச்சலத்திற்கும் நேபாளத்தின் மேற்குப் பகுதிக்கும் இடையே உள்ள உத்தரகாண்டின் 18 இடங்களில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பூர்ணச்சந்திர ராவ் குறிப்பிட்டுள்ளார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் இருந்து வடக்கே 56 கிலோ மீட்டர் தொலைவில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், கடந்த 19 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் நந்திகாமா நகரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் அண்ணா சாலை, ஒயிட்ஸ் சாலை போன்ற இடங்களில் சில கட்டிடங்களில் லேசான அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் ஊழியர்கள் பீதியடைந்தது, கட்டிடங்களை விட்டு வெளியேறினர். மெட்ரோ ரயில் பணிகளால் நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், நில அதிர்வு ஏற்படும் வகையில் அங்கே பணி நடைபெறவில்லை என அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
மேலும், தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தரவுகள் படி சென்னையில் எந்தவித நிலநடுக்கமும் பதிவாகவில்லை என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Delhi, Earthquake, India, Nepal