DYNASTY POLITICS SHOULD END BETTER POLITICS NEEDED IN BENGAL MAMATA BANERJEE BROTHER MUT
வாரிசு அரசியல் ஒழிய வேண்டும், மேற்கு வங்கத்தில் இன்னும் நல்ல அரசியல் தேவை: மம்தா சகோதரர் கார்த்திக் கருத்து
மம்தா பானர்ஜி.
மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவோம் என்று அரசியல் கட்சிகள் கூறுவதைக் கேட்டு வெறுப்பாக உள்ளதாகவும் மக்கள் வாழ்க்கையை உயர்த்துகிறேன் பேர்வழி என்று தங்கள் குடும்ப வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் சகோதரர் கார்த்திக் பானர்ஜி வாரிசு அரசியல் ஒழிய வேண்டும் என்றும் மேற்கு வங்கத்தில் அரசியல் இன்னும் மேம்பாடு அடைய வேண்டிய தேவை இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கம் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. பாஜக எப்படியாவது ஆட்சியைப் பிடிக்கவும் மம்தா எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்கவும் ஒருவர் மீது ஒருவர் வார்த்தைப் போர் புரிந்து வருகின்றனர். பாஜகவுக்கு கூடுதல் பலம் மாநில ஆளுநரும் சேர்ந்து மம்தாவை விமர்சிப்பதே.
இந்நிலையில் மம்தாவின் சகோதரர் கார்த்திக் பானர்ஜியே மேற்கு வங்க அரசியல் இன்னும் மேம்பட வேண்டும் என்று கூறிஉள்ளார். மேலும் மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவோம் என்று அரசியல் கட்சிகள் கூறுவதைக் கேட்டு வெறுப்பாக உள்ளதாகவும் மக்கள் வாழ்க்கையை உயர்த்துகிறேன் பேர்வழி என்று தங்கள் குடும்ப வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த பேட்டியில், அவரிடம் உங்கள் சகோதரி ஆட்சி பற்றி கூறுகிறீர்களா என்று கேள்வி எழுப்ப, அதற்கு அளித்த பதிலில் கார்த்திக் பானர்ஜி, “அரசியலில் போலித்தனங்களும் வேஷமும் பொதுவாகவே இருக்கிறது என்று பொதுப்படையாகத்தான் கூறுகிறேன்.
அரசியல் மக்களைச் சார்ந்ததாக இருக்க வேண்டும், அவர்கள் வாழ்க்கையை உயர்த்த வேண்டும். அரசியல் வாழ்க்கையில், பொது வாழ்க்கையில், இருப்பவர்கள் முதலில் மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் தங்கள் சொந்த நலன், குடும்ப நலன் பிற்பாடுதான்” என்றார்.
பாஜகவில் இணையப்போகிறாரா என்ற கேள்விக்கு, “எதிர்காலம் என்னவென்று எனக்கு இப்போது கூற முடியவில்லை. இது குறித்து அறிவிக்க வேண்டிய தேவை ஏற்படும் போது அறிவிப்பேன். இது குறித்து நானாக விரும்பும் வரை எந்தக் கருத்தையும் கூற மாட்டேன்” என்றார்.
திரிணாமுல் கட்சியிலிருந்து தலைவர்களை பாஜக தங்கள் பக்கம் இழுப்பது ஒருபுறம் இருக்க தற்போது மம்தாவின் சகோதரர் இப்படிப் பேசியுள்ளார். அபிஷேக் பானர்ஜியை மம்தா முதல்வராக்க திட்டமிடுவதாக அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் மம்தா மீது விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் வாரிசு அரசியல் பற்றி மம்தா சகோதரர் கார்த்திக் பானர்ஜி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.