மும்பையில் விடிய விடிய கனமழை... விமானம், ரயில் சேவைகள் முடக்கம்..!

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

news18
Updated: July 27, 2019, 10:42 AM IST
மும்பையில் விடிய விடிய கனமழை... விமானம், ரயில் சேவைகள் முடக்கம்..!
வெள்ளம் போல் காட்சியளிக்கும் மும்பை சாலைகள்
news18
Updated: July 27, 2019, 10:42 AM IST
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. 

மகாராஷ்டிராவில் பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரமடைந்ததால் கனமழை கொட்டி வருகிறது. மும்பை, கொலாபா, நவி மும்பை உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் மழை பெய்து வந்த நிலையில், மாலையில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.

இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. தொடர்ந்து விடிய விடிய மழை பெய்ததால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.


மழை மற்றும் போதிய வெளிச்சமின்மையால் மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வர வேண்டிய 17 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பதல்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து, நீச்சல் குளம் போல் காட்சியளித்தது.

பந்த்ரா பகுதியில் மேற்கு விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

Loading...

இதனிடையே, மும்பை, ராய்கட், ரத்னகிரி, தானே, பல்கர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அசாமில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒருவாரத்திற்கு மேலாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. மழை பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74-க அதிகரித்துள்ளது.

17 மாவட்டங்களில் உள்ள 27,15,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 768 முகாம்களில் ஒரு லட்சத்து 59,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பிகாரில் மழை மற்றும் வெள்ளத்தால் தாரபங்கா, மதுபானி உட்பட 13 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த மாவட்டங்களுக்குட்பட்ட 82,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகமதி, கமலா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரங்களில் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

மழை, வெள்ளத்தால் ஏராளமான கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சியளிக்கின்றன. இந்த பகுதிகளில் இந்திய விமானப்படை மூலம் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய சுற்றுலாப் பயணிகளை போலீசார் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு என்ற இடத்தில் கனமழையால் பாலத்திற்கு அடியில் வெள்ளம் சூழந்து காணப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த கார், வெள்ள நீருக்குள் மூழ்க தொடங்கியது. இதை அடுத்து காரினுள் இருந்த 5 இளைஞர்களை அப்பகுதியில் மக்கள் பத்திரமாக மீட்டனர்.

இதேபோன்று டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இதனிடையே, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்திற்கு 251 கோடியும், பிகார் மாநிலத்திற்கு 417 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

Also see...

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...