இந்தியாவுக்கு பயணத் தடை விதித்த நாடுகள் எவை? எந்தெந்த நாடுகளில் இந்தியர்களுக்கு அனுமதி?

இந்தியாவுக்கு பயணத் தடை விதித்த நாடுகள் எவை?

பிரிட்டன், கனடா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகள் இந்தியாவிலிருந்து பயணம் மேற்கொள்ள தடை விதித்துள்ளன. அதே நேரத்தில் அமெரிக்க உட்பட சில நாடுகள் இந்தியாவிலிருந்து பயணம் செய்வோருக்கு பயண ஆலோசனைகளையும் வெளியிட்டுள்ளன.

  • Share this:
இந்தியாவில் உக்கிரமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவின் 2வது அலை சர்வதேச அளவில் இதுவரை எந்தவொரு நாடும் பார்த்திராத பாதிப்பை தினந்தோறும் நம்மை சந்திக்க வைத்திருக்கிறது. தற்போது தினந்தோறும் 3 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்படுவதுடன், 2,000க்கு மேற்பட்டோர் உயிரிழப்பதும் தொடர்கதையாகி உள்ளது.

இதன் காரணமாக பல மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகளில் ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளன. டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் ஒரு படி மேல் சென்று முழு ஊரடங்கையும் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு கடும் பாதிப்பை சந்தித்த விமான சேவை தற்போது 2வது அலை பாதிப்பிலும் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. சர்வதேச விமான சேவையானது ஏர் பபுள், வந்தே பாரத் போன்ற திட்டங்களின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் உள்ளூர் விமான சேவை குறைந்த அளவே செயல்பாட்டில் உள்ளது. முதல் முறையாக உள்ளூர் விமான பயணிகளின் ஒரு நாள் எண்ணிக்கை 2 லட்சத்திற்கு கீழ் சென்றிருப்பதாக சிவில் ஏவியேஷன் துறை தெரிவித்துள்ளது.

பிரிட்டன், கனடா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகள் இந்தியாவிலிருந்து பயணம் மேற்கொள்ள தடை விதித்துள்ளன. அதே நேரத்தில் அமெரிக்க உட்பட சில நாடுகள் இந்தியாவிலிருந்து பயணம் செய்வோருக்கு பயண ஆலோசனைகளையும் வெளியிட்டுள்ளன.

சர்வதேச விமான சேவையில் என்னென்ன மாற்றம்


எந்தெந்த நாடுகள் இந்தியாவிலிருந்து விமான சேவைக்கு தடை விதித்துள்ளன?

இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் தீவிரத்தை பார்த்த பின்னர் சில நாடுகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தடை விதித்துள்ளன.

ஹாங்காங்:

ஹாங்காங்குடன் ஏர் பபுள் ஒப்பந்தம் இல்லாத நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அங்கிருந்து பயணிகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இந்நிலையில் மே 3ம் தேதி வரை ஹாங்காங் - இந்தியா இடையிலான விமானங்களுக்கு அந்நாடு தடை விதித்துள்ளது. சில நாட்கள் முன்னர் விஸ்தாரா விமான நிறுவனத்தின் மூலம் ஹாங்காங் வந்த பயணிகள் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது,

பிரிட்டன்:

பிரிட்டன் வகை கொரோனா கண்டறியப்பட்ட பின்னர் பிரிட்டனிலிருந்து இந்தியா வருகை தரும் விமானங்களுக்கு இந்திய அரசு தடை விதித்திருந்தது, தற்போது இந்தியாவில் 2ம் அலை கொரோனா தீவிரம் அடைந்திருப்பதால் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமான சேவைக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து ஏப்ரல் 30ம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு விமானங்கள் இயக்க இந்தியாவும் தடை விதித்துள்ளது.

துபாய்:

துபாய் அரசின் புதிய விதிகளின்படி இந்தியாவில் இருந்தும், 14 நாட்களுக்குள் இந்தியா சென்று வந்த பிற நாட்டினவருக்கும் துபாய் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. யாராக இருந்தாலும் 14 நாட்கள் வேறு ஒரு நாட்டில் தங்கியிருந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனடா:

கார்கோ விமானங்கள் தவிர்த்து இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பயணிகள் விமான சேவைக்கு அடுத்த 30 நாட்கள் கனடா அரசு தடை விதித்துள்ளது. கனடாவில் கொரோனா கண்டறியப்படுவோரில் பாதி பேர் இந்தியாவிலிருந்து வந்தவர்களாக இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்நாட்டின் விமான சேவையில் ஐந்தில் ஒரு பங்கு இந்திய விமானங்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது,

பாகிஸ்தான்:

வான் வழியாகவும், சாலை மார்க்கமாகவும் இந்தியாவில் இருந்து பயணிகள் வருவதற்கு இரண்டுவார காலம் தடை விதித்துள்ளது பாகிஸ்தான் அரசு.

நியூசிலாந்து:

இந்தியாவில் இருந்து விமான சேவைக்கு தடை விதித்த முதல் நாடு நியூசிலாந்து தான். ஏப்ரல் 11ம் தேதி முதல் 28ம் தேதி வரை இந்தியர்கள் மட்டுமின்றி நியூசிலாந்து குடிமக்களுக்கும் இந்தியாவில் இருந்து வரத்தேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது தவிர அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியா 27 நாடுகளுடன் ஏர் பபுள் எனப்படும் இருபக்க பயண ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

அவை ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், வங்கதேசம், பூட்டான், கனடா, எத்தியோப்பியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், ஜப்பான், கென்யா, குவைத், மாலத்தீவுகள், நேபாளம், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், கத்தார், ரஷ்யா, ருவாண்டா, செய்செல்ஸ், தான்சானியா, உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் உஸ்பெஸ்கிஸ்தான்.

பெரும்பான்மையான நாடுகள் பரிதவிக்கும் இந்திய குடிமக்கள், OCI கார்டு தாரர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகளை மட்டுமே தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கின்றன. சுற்றுலா விசாவை அனுமதிக்காத நாடுகளுக்குள் இந்தியர்கள் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு யாரெல்லாம் பயணிக்க அனுமதி?

* அமெரிக்க குடிமக்கள்

* நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் (pr)
*  அமெரிக்க விசா பெற்ற வெளிநாட்டவர்ர்கள்
* அமெரிக்க விசா வைத்துள்ள இந்தியர்கள்
* வெளிநாட்டு தேசங்களின் கடற்படை வீரர்கள்

 
Published by:Arun
First published: