பெண்கள் கல்லூரியில் போதையில் அத்துமீறி நுழைந்த கும்பல்...! போலீஸ் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு

பெண்கள் கல்லூரியில் போதையில் அத்துமீறி நுழைந்த கும்பல்...! போலீஸ் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு
  • News18
  • Last Updated: February 11, 2020, 12:07 PM IST
  • Share this:
டெல்லியில் கார்கி கல்லூரி வளாகத்தில் அத்துமீறி நுழைந்த கும்பல் அங்கு படிக்கும் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 6ஆம் தேதி டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கார்கி கல்லூரி ஆண்டு விழாவில் குடிபோதையுடன் அத்துமீறி உள்நுழைந்த கும்பல் அங்குள்ள மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கிறது. உரிய பாதுகாப்பை வழங்கத் தவறிய காவல்துறைக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் அந்தக் கல்லுரி மாணவிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் நடந்து, தாமதமாக நான்கு நாள்கள் கழித்து திங்கள்கிழமை (நேற்று) வழக்குப் பதிவு செய்தது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மாணவிகள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் இந்த விவகாரத்தைப் பகிர்ந்ததோடு, நூற்றுக்கணக்கில் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்திய பின்னரே இது பொதுவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.


”டெல்லி போலீஸ் இதனை நின்று வேடிக்கை பார்த்தனர். இதற்கு யாரை பொறுப்புச் சாட்டுவது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில், இதில் தொடர்புடைய அனைவரும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்” என அந்தக் கல்லூரி மாணவி ஒருவர் கூறியுள்ளார்.

இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், “கார்கி கல்லூரியில் சிலர் தகாத முறையில் நம் பெண் பிள்ளைகளிடம் நடந்துகொண்டிருப்பது மிகுந்த கவலையளிப்பதாகவும் அதிருப்தியளிப்பதாகவும் உள்ளது. இதுபோன்ற நடத்தைகளை சகித்துக்கொள்ள முடியாது. குற்றவாளிகளுக்கு உரிய கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். கல்லூரிகளில் படிக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு பாதுகாப்புணர்வை நாம் உறுதிபடுத்த வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

உண்மை அறியும் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும், வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தி இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் கார்கி கல்லூரி தலையாசிரியர் ப்ரொமிளா குமார் கூறியுள்ளார்.Also see:
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்