டிரைவிங் லைசன்ஸ், வாகன காப்பீடுகளை புதுப்பிக்க 2021 மார்ச் வரை அவகாசம் நீட்டிப்பு..

கொரோன வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு ஓட்டுநர் உரிமம் போன்ற வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை 2021 மார்ச் 31 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

கொரோன வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு ஓட்டுநர் உரிமம் போன்ற வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை 2021 மார்ச் 31 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

  • Share this:
கொரோனா தொற்று காரணத்தால் உலகம் முழுவதும் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் முடக்கத்தில் தான் உள்ளது.  இந்த கோவிட் -19 தொற்றுநோயை கருத்தில் கொண்டு ஓட்டுநர் உரிமம் , பதிவுச் சான்றிதழ் மற்றும் பர்மிட் போன்ற மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை 2021 மார்ச் 31 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. 2020 பிப்ரவரி 1ம் தேதி முதல் 2021 மார்ச் 31-ஆம் தேதி வரை காலாவதியாகும் அனைத்து வாகன ஆவணங்களுக்கும் இந்த அறிவிப்பே பொருந்தும். இந்த தேதிகளில் காலாவதியான ஆவணங்களை செல்லத்தக்க ஆவணங்களாக கருத வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மார்ச் 30, ஜூன் 9 மற்றும் ஆகஸ்ட் 24 ஆகிய தேதிகளில் முந்தைய ஆலோசனைகளுக்குப் பிறகு இது நான்காவது நீட்டிப்பு ஆகும். பிட்னெஸ் சர்டிபிகேட், பர்மிட் , ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ்  போன்ற ஆவணங்களுக்கும் இந்த ஆணை பொருந்தும் என்றும் இது டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முன்னர் அறிவுறுத்தியது.

"கோவிட் -19 பரவுவதைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, மேற்கூறிய அனைத்து ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் 2021 மார்ச் 31 வரை ஆகும். தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறிய அமைச்சகம், "இதுபோன்ற ஆவணங்களை 2021 மார்ச் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகள் மக்களுக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என விளக்கியுள்ளது. 

இது சமூக இடைவெளியை பின்பற்றவும் போக்குவரத்து தொடர்பான சேவைகளைப் பெற குடிமக்களுக்கு உதவும் என்றது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அதன் உற்பத்தி தொடர்ந்து நடைபெற அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதுடன், அத்தகைய பொருட்கள் / சரக்குகளை கொண்டு செல்ல வாகனங்களை அனுமதித்துள்ளது. மேற்கண்ட இந்த இடைப்பட்ட தேதிகளில் காலாவதியான வாகன ஆவணங்களை 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை செல்லத்தகுந்த ஆவணங்களாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கருத்தில் கொண்டு மக்களை பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. 

இந்த அறிவிப்பை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராததாலும் ஊரடங்கால் மோட்டார் வாகனத் தொழில்கள் பாதிப்படைந்ததாலும் மத்திய அரசு இந்த அவகாசத்தை அளித்திருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கொரோனா பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டாலும், தங்கள் வாகனங்கள் அனைத்தையும் இயக்க முடியாத சூழல் உள்ளதால் சலுகையை நீட்டிக்க வேண்டும் என வர்த்தக வாகன உரிமையாளர்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், அவற்றுக்கான வாகனங்கள் முற்றிலும் முடங்கிக்கிடக்கின்றன. எனவே, அவற்றின் ஆவணங்களை புதுப்பிக்க முடியாத சூழல் நிலவுவதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை ஏற்று, சலுகை காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதனிடையே இந்த அறிவிப்புக்கு மோட்டார் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Published by:Tamilmalar Natarajan
First published: