வரதட்சணை புகார்களில் உடனடி கைது: உச்சநீதிமன்றம் அதிரடி

news18
Updated: September 14, 2018, 9:26 PM IST
வரதட்சணை புகார்களில் உடனடி கைது: உச்சநீதிமன்றம் அதிரடி
உச்ச நீதிமன்றம்
news18
Updated: September 14, 2018, 9:26 PM IST
வரதட்சணை கொடுமை தொடர்பான புகார்களில் உடனடியாக கைது செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே அளித்திருந்த உத்தரவை மாற்றிய நீதிமன்றம், இந்தப் புகார்களை விசாரிக்க நாடாளுமன்றம் மூலம் புதிய குழுவை அமைக்கலாம் என்றும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வரதட்சணை புகார்களுக்கு உள்ளானவர்களை உடனடியாக கைது செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

அதில், மாவட்ட அளவிலான குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விசாரணை நடத்தி அளிக்கும் அறிக்கை அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.  அதில், மாவட்ட அளவிலான குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விசாரணையால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இன்று தீர்ப்பளித்தது. அதில், மாவட்ட அளவிலான குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற முந்தைய உத்தரவை ரத்துசெய்தனர்.

மேலும், பாரபட்சமின்றி செயல்படுவதற்காக, நாடாளுமன்றம் மூலம் தேசிய அளவிலான குழுவை அமைக்கலாம் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தினர். வரதட்சணை கொடுமை தொடர்பான 498ஏ வன்கொடுமை தடுப்புச் சட்டம், சில நேரங்களில் ஆண்களையும், அவர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்களையும் பாதிப்பதாக உள்ளது என்றும், சமூகத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பெண்களால், பாதிக்கப்படும் ஆண்களுக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கு நீதிமன்றங்கள் தயாராக இருப்பதாகவும் நீதிபதிகள், தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.
First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்