அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் மேட்-இன்-இந்தியா விமானமான டோர்னியர் 228 (Dornier 228) நேற்று, அதாவது ஏப்ரல் 12, செவ்வாய் கிழமையன்று திப்ருகர் - பாசிகாட் வழித்தடத்தில் தனது முதல் வணிகப் பயணத்தை மேற்கொண்டது. இந்த பயணத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆன ஜோதிராதித்ய சிந்தியாவும் ஒரு பயணியாக தன்னை இணைத்து கொண்டார்.
அரசாங்கத்தின் ஆர்சிஎஸ்- யுடிஏஎன் (RCS-UDAN) திட்டத்தின் கீழ் விமானங்களை இயக்கும் ஏர் இந்தியாவின் பிராந்தியப் பிரிவு தான் அலையன்ஸ் ஏர் (Alliance Air) என்பதும், உரிம ஒப்பந்தத்தின் கீழ் ஹெச்ஏஎல் (HAL) மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு விமானம் தான் டோர்னியர் 228 என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசால் நடத்தப்படும் அலையன்ஸ் ஏர் நிறுவனம், 17 இருக்கைகள் கொண்ட இரண்டு டோர்னியர் 228 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கு, அரசாங்கத்துக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் செய்தது. டோர்னியர் 228 ஆனது இந்திய விமானப்படையால் இயக்கப்படும் டிஓ-228-ஐ அடிப்படையாகக் கொண்டது என்பதும், இதுவரையிலாக டோர்னியர் 228 விமானங்கள் ஆயுதப்படைகளால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏஆர் ரகுமான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக உருவாக்கிய மாணவன்
தன் முதல் பயணத்திலேயே, அசாமின் திப்ருகர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பாசிகாட்டை இணைத்துள்ள இந்த விமானம், வரும் காலங்களில் மேலதிக வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் என்று அலையன்ஸ் ஏர் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் சிவில் நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களை இயக்கும் இந்தியாவின் முதல் வணிக விமான நிறுவனமாக இது இருக்கும் என்பதையும் அலையன்ஸ் ஏர் நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.
டோர்னியர் 228-இன் இந்த முதல் பயணம் மற்றும் ஃப்ளையிங் ட்ரெயினிங் ஆர்கனைசேஷனின் திறப்பு விழாவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். திப்ருகர் - பாசிகாட் - லிலாபரி - திப்ருகர் வழித்தடத்தில் வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் வழக்கமான விமானச் செயல்பாடுகள் தொடங்கப்பட உள்ளன. மேலும் திப்ருகார் விமான நிலையத்தை மையமாக கொண்டு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தேசு, மெச்சுகா, ஜிரோ மற்றும் டுடிங்கிற்கு இந்த விமான சேவைகள் விரிவுபடுத்தப்படும்.
ஹெச்ஏஎல் கூற்றுப்படி, இந்த 'வெர்சடைல்' விமானமானது குறுகிய டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் திறன்களைக் கொண்டுள்ளது மற்றும் செமி-ப்ரிபேர்டு ஓடுபாதைகளில் இருந்து புறப்படும் மற்றும் தரையிறங்கும் திறன் கொண்டது.
உண்மையில் டோர்னியர் ஒரு ஜெர்மன் விமானம் ஆகும், இது 1990 களின் முற்பகுதி வரை இந்தியா முழுவதும் 100 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களுக்கு சேவை செய்ய - நீண்ட காலமாக செயல்படாத பிராந்திய விமான நிறுவனமான வாயுடூட் (Vayudoot ) மூலம் - முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. 1981 ஆம் ஆண்டில், ஹெச்ஏஎல் இந்த விமானங்களுக்கான உற்பத்தி உரிமத்தை பெற்று, அவற்றில் 125 விமானங்களை சிவிலியன் மற்றும் இராணுவ நோக்கங்களுக்காக அசெம்பிள் செய்தது. தற்போது பயன்படுத்தப்படும் விமானங்கள் அதன் முன்னோடிகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் மேம்பட்ட பதிப்பாகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.