இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணமாக 6 அமெரிக்க அதிபர்கள் வந்துள்ளனர். அந்த வரிசையில் 7-வது அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருக்கிறார்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் முதல் 53 ஆண்டுகளில் மூன்றே மூன்று அமெரிக்க அதிபர்கள்தாம் இந்தியாவிற்கு அரசுமுறை பயணமாக வந்துள்ளனர். அதேநேரம் 2000-க்குப் பிறகு, அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற அனைவரும் தங்களது பதவிக்காலத்தில் ஒருமுறையாவது இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்தியாவிற்கு வருகை தரும் 7-வது அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இருக்கிறார்.
1959-இல் அப்போதைய அமெரிக்க அதிபர் ட்வைட் டி ஐசனாவர் டெல்லி வந்து பிரமர் ஜவஹர்லால் நேருவைச் சந்தித்ததுடன் நாடாளுமன்றத்திலும் உரையாற்றினார். அமெரிக்கா - ரஷ்யா இடையே பணிப்போர் நீடித்த நிலையில், அணிசேரா இயக்கத்திற்கு தலைமை ஏற்றிருந்த இந்தியாவை அமெரிக்க ஆதரவு நாடாகக் காட்டிக்கொள்ள இந்தச் சந்திப்பு உதவியது.
1969-இல் டெல்லி வந்த அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசினார். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு சிக்கலானதாக இருந்தநிலையில் பிரச்சனையைப் பேசித் தீர்க்க அவர் அறிவுறுத்தினார்.
மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது இந்தியா வந்து அவரைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டருக்கு அந்த பயணம் வெற்றிகரமானதாக இல்லை. ஏனெனில், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்துவிட்டது.
22 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன், குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனை சந்தித்துப் பேசினார். இவரின் 6 நாட்கள் பயணமே, அமெரிக்க அதிபர் ஒருவரின் அதிகநாள் இந்தியப் பயணமாக அமைந்தது.
மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் வந்த அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், அமெரிக்க - இந்திய சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றார்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது டெல்லி வந்த அதிபர் பராக் ஒபாமா, ஐநா சபையில் இந்தியா நிரந்தர இடம் பெற ஆதரவளித்தார். நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் குடியரசு தினத்தின் சிறப்பு விருந்தினராக வருகை தந்த அவர், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் சிக்கலைத் தீர்க்கும் வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிச் சென்றார். ட்ரம்ப் அதிபரான பின் பிரதமர் நரேந்திர மோடியை இதுவரை 7 முறை சந்தித்துப் பேசியிருந்தபோதும், இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Donald Trump, Trump India Visit