377-வது சட்டப்பிரிவு- பெரும்பான்மை விருப்பத்தின் கீழ் முடிவெடுக்க மாட்டோம்: உச்சநீதிமன்றம்

news18
Updated: July 12, 2018, 8:41 PM IST
377-வது சட்டப்பிரிவு-  பெரும்பான்மை விருப்பத்தின் கீழ் முடிவெடுக்க மாட்டோம்: உச்சநீதிமன்றம்
கோப்புப்படம்
news18
Updated: July 12, 2018, 8:41 PM IST
377-வது சட்டப்பிரிவு தொடர்பாக பெரும்பான்மை விருப்பத்தின் கீழ் முடிவெடுக்க மாட்டோம் என்றும், அரசியல் சாசன நெறிப்படியே உத்தரவிடுவோம் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளர்.

ஓரினச் சேர்க்கையை குற்றம் எனக் கூறும் 377-வது சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பான விவாதம், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு இன்றும் தொடர்ந்து நடைபெற்றது.

மூத்த வழக்கறிஞர்கள் ஷியாம் திவான், ஆனந்த் க்ரோவர் மற்றும் வழக்கறிஞர்கள் ஜெயனா கோத்தாரி, மேனகா குருசாமி ஆகியோர் நேற்று தங்களது தரப்பு வாதத்தை முன்வைத்தனர். இன்று தனது வாதத்தை ஆரம்பித்த வழக்கறிஞர் கிருஷ்ணன் வேணுகோபால், எல்.ஜி.பி.டி.க்யூ. சமூகத்தினருக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், உடை, செயல்பாடு, பேச்சு உள்ளிட்ட தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், எல்.ஜி.பி.டி.க்யூ. சமூகத்தினர் தங்களுக்கான கூட்டமைப்பு ஏற்படுத்துவதற்கு தடை உள்ளதாக தெரிவித்த கிருஷ்ணன் வேணுகோபால், பொதுவெளியைப் பயன்படுத்துவதிலும் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து 377 சட்டப்பிரிவை ஆதரிக்கும் சில தேவாலயங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோஜ் ஜார்ஜ், நீதிபதிகளில் ஒருவர்கூட தங்களுக்கு சாதகமாக இல்லை என்றும் மத்திய அரசு கூட தனது நிலையிலிருந்து பின்வாங்கிவிட்டதாகவும் வாதிட்டார். இதற்கு விளக்கமளித்த நீதிபதி சந்திரசூட், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்றார்.

இதையடுத்து 377-வது சட்டப்பிரிவுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் முன்பு பொதுமக்களின் கருத்தை பெற வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, பொது அறநெறியின் கீழ் முடிவெடுக்க மாட்டோம் என்றும், அரசியல்சாசன நெறிப்படியே உத்தரவிடுவோம் என்றார். வழக்கறிஞர்கள் அனைவரின் வாதமும் நிறைவடைந்த நிலையில், மனுதாரர்கள் அல்லாத வழக்கறிஞர்களும் தங்களது தரப்பு வாதத்தை முன்வைப்பதற்கு அவகாசம் கோரப்பட்டது. அவர்களுக்கு அடுத்த செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்படும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...