15 வயது சிறுமியின் கழுத்தில் 3.5 கிலோ எடை கொண்ட கால்பந்து அளவிலான கட்டி: 21 மருத்துவர்கள் இணைந்து செய்த சிக்கலான ஆபரேஷன்!

15 வயது சிறுமியின் கழுத்தில் 3.5 கிலோ எடை கொண்ட கால்பந்து அளவிலான கட்டி: 21 மருத்துவர்கள் இணைந்து செய்த சிக்கலான ஆபரேஷன்!

சிறுமி சுர்பி

ஒரு அந்நியரிடம் நீங்கள் காட்டிய கருணை மனிதநேயத்தின் மீதான எனது நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. பார்வையாளர்களிடமிருந்து எந்தவிதமான அவமானகரமான கருத்துக்களுக்கும் ஆட்படாமல், அவள் இப்போது ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்தி வருகிறாள்

  • Share this:
15 வயது சிறுமியின் கழுத்தில் இருந்த கால்பந்து அளவிலான 3.5 கிலோ எடையுள்ள கட்டியை மிகவும் சிக்கலான முறையிலான ஆபரேஷன் மூலம் 21 மருத்துவர்கள் இணைந்து அகற்றியுள்ளனர்.

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்களின் மகள் சுர்பி பென் (வயது 15). சுர்பி குழந்தையாக இருந்த போது அவரின் முகத்தில் கட்டிகள் இருந்ததை அவரின் பெற்றோர் கவனித்தனர். இது மெல்ல மெல்ல அவளின் கழுத்து முழுவதும் பரவி வளரத் தொடங்கி அவரின் உருவத்தை விகாரமாக மாற்றியது.

மகளுக்கு இருக்கும் உடல்நலக் குறையை சரிசெய்வதற்காக இத்தனை ஆண்டுகளில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பல மருத்துவர்களையும் சுர்பியின் பெற்றோரை பார்த்துள்ளனர். இது மிகவும் சிக்கலானது என எடுத்துரைத்த மருத்துவர்கள், இக்கட்டியை அகற்ற வேண்டுமெனில் பெரு நகரங்களில் உள்ள மருத்துவமனையில் தான் ஆபரேஷன் செய்ய முடியும் உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் இது கடினம் என கூறியுள்ளனர்.

மேலும் இதற்கு பல சர்ஜரிகளையும், தொடர் சிகிச்சைகளையும் செய்ய வேண்டும் என்பதால் இக்கட்டியை அகற்றுவதற்கு பல லட்ச ரூபாய் செலவு ஆகும் என்பதையும் சுர்பியின் பெற்றோருக்கு தெரியவந்தது. விவசாய தொழிலாளர்களான அவரின் பெற்றோர்களால் அவ்வளவு பெரிய தொகையை புரட்ட முடியாது என்பதால் ஏதாவது அற்புதம் நேர்ந்தால் மட்டுமே தங்களின் மகளின் எதிர்காலம் காக்கப்படும் என காலத்தை ஓட்டியுள்ளனர்.

இதனிடையே அதிர்ஷ்டவசமாக சிறுமி சுர்பிக்கு சில தன்னார்வலர்களின் உதவி கிடைத்தது.
'NewsLions', 'Milaap' என்ற சமூக சேவையாற்றும் அமைப்புகள் சுர்பியின் சிகிச்சைக்கான செலவை தன்னார்வலர்களின் உதவியுடன் சேர்த்துள்ளனர். ஏழை எளியவர்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் Milaap அமைப்பின் மூலம் மாணவி சுர்பியின் சிகிச்சைக்கான 70 லட்ச ரூபாய் பணத்தை 1,200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் இருந்து வசூலித்து வழங்கியுள்ளது. இதன் மூலம் பெங்களூருவில் உள்ள Aster CMI என்ற மருத்துவமனையில் 21 டாக்டர்கள் சுர்பியின் சிக்கலான ஆபரேஷன்களை ஓராண்டாக அடுத்தடுத்து மேற்கொண்டு தற்போது அவரின் 3.5 கிலோ கட்டியை அகற்றியுள்ளனர். இதன் மூலம் மாணவியின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு வந்துள்ளது.

மனிதநேயம்


தன்னுடைய அனுபவங்களை சுர்பி கூறுகையில், என்னுடைய கட்டி மிகப்பெரியது மேலும் மிகவும் விகாரமானது என்பதால் என்னால் பிறரை போல வெளியில் இயல்பாக செல்ல முடியாது. கழுத்தில் இருந்த கட்டி வலிதரக்கூடியது என்பதால் என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை இதனால் கடந்த ஆண்டுடன் பள்ளிக்கு செல்வதையும் நிறுத்திவிட்டேன். எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடக்க வேண்டும் என என் பெற்றோரிடம் பல முறை வருத்தப்பட்டிருக்கிறேன், எனக்கு மீண்டும் பள்ளிக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்பதே விருப்பம் என தெரிவித்தார்.

தனது மகளின் கட்டி அகற்றப்பட்டது குறித்து சுர்பியின் தாயார் ரேகா கூறுகையில், தற்போது மிகவும் அழகான, வலிமையான சுர்பியை காண்கிறேன். அவளின் மருத்துவ செலவிற்காக உதவிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் நன்றி.

ஒரு அந்நியரிடம் நீங்கள் காட்டிய கருணை மனிதநேயத்தின் மீதான எனது நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. பார்வையாளர்களிடமிருந்து எந்தவிதமான அவமானகரமான கருத்துக்களுக்கும் ஆட்படாமல், அவள் இப்போது ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்தி வருகிறாள், சுதந்திரமாக தனது மிதிவண்டியில் சவாரி செய்கிறாள், அக்கம் பக்கத்திலுள்ள நண்பர்களுடன் விளையாடுகிறாள், மீண்டும் கல்வியை தொடர்கிறாள்” என்றார்.
Published by:Arun
First published: