DO NOT RESUME NEWS RATINGS TILL WE EXAMINE COMMITTEE REPORT MIB TELLS BARC SKD
அறிக்கை ஆய்வில் உள்ளது: டி.ஆர்.பி ரேட்டிங்கை வெளியிட வேண்டாம் - பார்க் அமைப்புக்கு மத்திய அரசு உத்தரவு
மாதிரி படம்
விசாரணை அறிக்கை வரும் வரையில் டி.ஆர்.பி ரேட்டிங்கை வெளியிடக் கூடாது என்று பார்க் அமைப்புக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தொலைக்காட்சி சேனல்கள் எவ்வளவு மக்களால் பார்க்கப்படுகிறது என்று பார்க் என்று அழைக்கப்படும் Broadcast Audience Research Council கணக்கிட்டுவந்தது. ஒரு குறிப்பிட்ட சேனலை பொதுமக்கள் பார்க்கும் நேரத்தைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு சேனலுக்கு டி.ஆர்.பி என்று அழைக்கப்படும் television rating point வழங்கப்படும். அந்த டி.ஆர்.பி ரேட்டிங், ஒரு சேனலுக்கு மிகவும் முக்கியமான அளவீடாகும். டி.ஆர்.பியின் அடிப்படையிலேயே ஒரு சேனலின் விளம்பர வருவாய் நிர்ணயமாகும். இந்தநிலையில், கடந்த அக்டோபர் மாதம் டி.ஆர்.பியை கணக்கிடுவதில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது பார்வையாளர்கள் குறித்து மதிப்பிடும் பேரோமீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ள வீடுகளில் குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்து தங்கள் சேனல்களை தொடர்ச்சியாக பார்க்குமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதன்மூலம் பார்வையாளர்களும் வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளும் நோக்கில் செயல்பட்டுள்ளனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதனையடுத்து, டி.ஆர்.பி ரேட்டிங்கை வெளியிடக் கூடாது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை உத்தரவிட்டது. இந்தநிலையில், மாநில மற்றும் தேசிய அளவிலான தொலைக்காட்சிகள், டி.ஆர்.பி ரேட்டிங்கை மீண்டும் தொடங்கவேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதினர். இந்தநிலையில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திலிருந்து பார்க் அமைப்புக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ‘பிப்ரவரி 15-ம் தேதியிட்ட கடிதத்தில், தற்போதைய டி.ஆர்.பி கணக்கிடும் முறையில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆராயவும், அந்தமுறையை வலிமைப்படுத்தி டி.ஆர்.பி ரேட்டிங்கில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தவும் பிரசார் பாரதி தலைமைச் செயல் அதிகாரி சாஷி சேகர் வேம்பதி தலைமையில் 4-11-2020-ம் தேதியன்று குழு அமைக்கப்பட்டுள்ளது என்று உங்களுக்குத் தெரியும். அந்தக் குழு சமர்பித்த அறிக்கை ஆய்வில் உள்ளது. அதனால், பார்க் அமைப்பு டி.ஆர்.பி ரேட்டிங்கை வெளியிடாமல் தற்போதைய நிலையில் தொடரவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.