வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை முதல் அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்க வாசல் திறந்திருக்கும். ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதன் முறையாக இந்த ஆண்டில் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, வைகுண்ட வாசல் திறந்திருக்கும் 10 நாட்களும் உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசன அனுமதி அளிக்கப்படும் என்று கூறியது திருமலை திருப்பதி தேவஸ்தானம், அதன்படி, திருப்பதியைச் சேர்ந்த பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை பெறுவதற்காக 5 இடங்களில் கவுண்டர்களை ஏற்படுத்தியது.
நேற்று நள்ளிரவு 12 மணி முதல் செயல்படத் துவங்கி அந்த கவுண்டர்களில், திருப்பதியைச் சேர்ந்த பக்தர்கள் வரிசையாக நின்று இலவச தரிசன டோக்கன்களைப் பெற, ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, நாளொன்றிற்கு பத்தாயிரம் என்ற அடிப்படையில் இலவச தரிசன டோக்கன் வினியோகம் நடைபெற்று வருகின்றது. அதன்படி, தற்போது ஜனவரி மாதம் இரண்டாம் தேதி தரிசனம் செய்வதற்கு தேவையான டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.