DINESH TRIVEDI TMC MP RESIGNS FROM RAJYA SABHA OVER VIOLENCE IN BENGAL SOURCES SAY HE LIKELY TO JOIN BJP ARU
மமதா பானர்ஜிக்கு அதிகரிக்கும் நெருக்கடி: திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜ்யசபா எம்.பி பதவியில் இருந்து ராஜினாமா!
தினேஷ் திரிவேதி
ரவீந்திரநாத் தாகூர் பிறந்த மண்ணில் இருந்து வருகிறேன், ஆனால் அங்கு நடக்கும் வன்முறைகள் கவலையளிப்பதாக உள்ளது. தவறான ஆட்சிக்கு எதிராக நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று என் சிந்தனை எனக்கு வலியுறுத்துகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.
மேற்குவங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள், எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் என தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜிக்கு அக்கட்சியினரின் தொடர் விலகல் மிகுந்த நெருக்கடியை அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
இடதுசாரி கட்சியினர், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் என சுழன்று கொண்டிருந்த மேற்குவங்க அரசியலில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல், பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஏறக்குறைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஒப்பான வெற்றியை அத்தேர்தலில் பாஜக பதிவு செய்த நிலையில் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றியை பதிவு செய்து மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே சிக்கலில் தவிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் அதன் மூத்த தலைவரும், 2012-ல் ரயில்வே அமைச்சருமாக இருந்த தினேஷ் திரிவேதி தனது ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்திருப்பது மேலும் நெருக்கடியை தந்துள்ளது.
பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று உரையாற்றிய எம்.பி தினேஷ் திரிவேதி, மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி நடைபெற்று வரும் வன்முறை நிகழ்வுகள் காரணமாக தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
“ரவீந்திரநாத் தாகூர் பிறந்த மண்ணில் இருந்து வருகிறேன், ஆனால் அங்கு நடக்கும் வன்முறைகள் கவலையளிப்பதாக உள்ளது. தவறான ஆட்சிக்கு எதிராக நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று என் சிந்தனை எனக்கு வலியுறுத்துகிறது. இதன் மூலம் எனது ஜென்மபூமியில் உள்ள மக்களுக்காக நான் சுதந்திரமாக சேவை புரிய முடியும்.”
இவ்வாறு தனது உரையில் தினேஷ் திரிவேதி பேசினார்.
நீண்ட காலமாகவே தினேஷ் திரிவேதியால் திரிணாமுல் காங்கிரஸில் சுதந்திரமாக பணியாற்ற முடியவில்லை என கூறப்படுகிறது. 2020 ஏப்ரல் மாதத்தில் தான் தினேஷ் ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012ல் மத்திய ரயில்வே துறை அமைச்சராக தினேஷ் திரிவேதி இருந்த போது தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் டிக்கெட் விலையை உயர்த்தியதற்காக மமதா பானர்ஜி அவரை ராஜினாமா செய்யுமாறு நெருக்கடி அளித்ததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். ஒரு முறை சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார்.
ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்த தினேஷ் திரிவேதி பாஜகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சவுகதா ராய், தினேஷ் திரிவேதியின் ராஜினாமா குறித்து கூறுகையில், தினேஷ் திரிவேதி ஒரு அடிமட்ட கட்சி உறுப்பினர் கிடையாது, அவர் இப்பதவியை ராஜினாமா செய்தது ஆச்சரியம் அளிக்கவில்லை. அவருக்கு பதிலாக அடிமட்ட அளவிலான கட்சி பிரமுகர் ஒருவர் எம்.பி ஆக்கப்படுவார் என தெரிவித்தார்.