மேற்குவங்க பாஜக தலைவர் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை!

மேற்குவங்க பாஜக தலைவர்

மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

  • Share this:
8 கட்டங்களாக நடைபெற்று வரும் மேற்குவங்க தேர்தல் வன்முறை சம்பவங்கள், வார்த்தை மோதல் என பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி சர்ச்சைக்குரிய வகையில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அவருக்கு சமீபத்தில் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்திருந்த நிலையில் தற்போது மேற்குவங்க மாநில பாஜக தலைவரான திலீப் கோஷ்க்கு 24 மணி நேரம் பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது.

மேற்குவங்கத்தில் ஏப்ரல் 10ம் தேதியன்று 4ம் கட்ட வாக்குப்பதிவின் போது கூச் பெகர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில், காலை 8 மணி அளவில் அங்குள்ள சித்தால்குச்சி பகுதியில் உள்ள 85ம் எண் வாக்குச்சாவடியில் மத்திய பாதுகாப்புப் படையினர் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, இதில் சுயபாதுகாப்புக்காக பாதுகாப்புப் படையினர் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

சித்தால்குச்சி நிகழ்வு குறித்து மேற்குவங்க மாநில பாஜக தலைவரான திலீப் கோஷ் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது, “இது போன்று தாக்குதலில் ஈடுபடுபவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? சித்தால்குச்சியில் சுடப்பட்டது ஆரம்பம் தான் இது போன்று மேற்குவங்கத்தில் சேட்டைக்காரர்கள் இல்லாமல் செய்யப்படுவார்கள்.

பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிகள் வெறும் பார்வைக்கானது அல்ல என்பதையும் குண்டுகளின் சக்தியை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள், மாநிலத்தில் சட்டம் , ஒழுங்கை கையில் எடுப்பவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் ” என்று பேசினார்.

திலீப் கோஷின் இந்த பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் திலீப் கோஷ்க்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் உங்களின் பேச்சு தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறியுள்ளது. ஆத்திரமூட்டும் மற்றும் உணர்ச்சிகளை தீவிரமாகத் தூண்டக்கூடிய வகையில் உங்களின் பேச்சு அமைந்துள்ளது. இது சட்டம் ஒழுங்கையும், தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் இருப்பதால் 24 மணி நேரம் பரப்புரையில் ஈடுபட உங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது எனவும் ஏப்ரல் 15ம் தேதி இரவு 7 மணி முதல் ஏப்ரல் 16ம் தேதி இரவு 7 மணி வரை தேர்தல் பரப்புரை செய்ய தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு முடிவு பெற்றுள்ள நிலையில் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது,

 
Published by:Arun
First published: