செல்லப்பிராணிகளுக்கான முதல் அரசு மின்மயானம்.. டெல்லி அரசுக்கு குவியும் பாராட்டுகள்..

செல்லப்பிராணிகளுக்கான முதல் அரசு மின் மயானம்

டெல்லியில் செல்லப்பிராணிகளின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்கு முதன்முறையாக மின்மயானம் அமைக்கப்பட உள்ளது.

 • Share this:
  நாட்டிலேயே அரசு சார்பில் அமைக்கப்படும் முதல் மின்மயானம் என்பதால் விலங்குகள் நல ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  வீட்டில் ஒருவரைப்போல் வளரும் நாய், பூனை ஆகியவற்றின் பிரிவு குடும்ப உறுப்பினரின் பிரிவுக்கு இணையான வலியை ஏற்படுத்தும். ஆனால், அவை இறந்தால் முறையாக அடக்கம் செய்வதற்கான இடம் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் இல்லை. இது செல்லப்பிராணி பிரியர்களுக்கு வருத்தமாக இருந்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் புதிய முயற்சியாக செல்லப்பிராணிகளுக்கான புதிய மின் மயானம் அமைக்கப்பட உள்ளது. நாட்டிலேயே அரசு சார்பில் செல்லப்பிராணிகளின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்காக கட்டப்படும் முதல் மின்மயானம் என்பதால், விலங்குகள் நல ஆர்வலர்கள் தங்களின் பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.

  தெற்கு டெல்லி மாநகராட்சியின் சார்பில் துவார்கா பகுதியில் 700 சதுர அடி பரப்பளவில் புதிய மின்மயானம் அமைக்கப்பட உள்ளது. அங்கு, செல்லப்பிராணிகளுக்கு உரிய மதச் சடங்குகளுடன் இறுதி மரியாதை செய்யலாம். மேலும், 15 நாட்கள் வரை செல்லப்பிராணிகளின் சாம்பல் பத்திரப்படுத்தி வைக்கப்படும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. இது குறித்து பேசிய தெற்கு டெல்லி மாநகராட்சி அதிகாரி ஒருவர், செல்லப் பிராணிகளுக்கான மின் மயானம் அமைப்பதற்கான திட்டத்துக்கு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

  விரைவில் ஒப்பந்தபுள்ளி மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் துவங்கும் என்று கூறிய அவர், தனியார் மற்றும் மக்கள் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அதிகாரி, " மனிதர்களுக்கும், வீட்டு விலங்குகளுக்கும் இடையிலான உறவு மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. குடும்ப உறுப்பினர்களைப் போல் வளரும் நாய் மற்றும் பூனைகளுக்கு உரிய மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்வது அவசியம். மனிதர்களுக்கு செய்வதுபோன்ற அனைத்து சடங்குகளுடன் கூடிய இறுதி மரியாதை செல்லப்பிராணிகளுக்கும் வழங்க வேண்டும் என்பதை உணர்ந்து இத்தகைய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

  மாநகராட்சி மின் மயானத்தில் செல்லப்பிராணிகள் இறுதிச்சடங்கு மேற்கொள்வதற்கு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 கிலோ எடையுடைய நாய்களுக்கு ரூ.2000, அதற்கு மேல் எடையுடைய நாய்களுக்கு ரூ.3000 ஆயிரமும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. தெற்கு டெல்லி பகுதியில் இறக்கும் தெரு நாய்களுக்கு முழுவதும் இலவசமாக இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் தெரு நாய்களுக்கு இறுதிச் சடங்கு மேற்கொள்ள ரூ.500 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

  அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..

  வீட்டு விலங்குகளையும், தெரு நாய்களையும் எடுத்துவர தெற்கு டெல்லி மாநகராட்சி சார்பில் வாகன வசதியும் மேற்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய மின் மயானத்தில் அதிகபட்சமாக 150 கிலோ மற்றும் 100 கிலோ எடையுடைய நாய்களை தகனம் செய்யும் வகையில் இரு யூனிட்டுகள் அமைக்கப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

  தற்போது தெற்கு டெல்லி பகுதியில் அதிகமாக செல்லப்பிராணிகள் வளர்ப்போர் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் பொமேரியன், லேப்ராடர், ஜெர்மன் ஷெப்பேர்டு உள்ளிட்ட பல்வேறு வகையான நாய்கள் வளர்க்கப்படுவதால், தெற்கு டெல்லி மாநகராட்சியின் இத்தகைய முயற்சி அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: