ஊரகப் பகுதிகளில் ஆண்டிற்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அது தற்போது 150 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கோடிக்கணக்கான கிராமப்புற மக்கள் பயன்பெற்று வருகின்றனர். வேலை நடைபெறும் நாட்களில் நூறு நாள் வேலைத் திட்ட அட்டையுடன் வருகை புரியும் மக்கள், மேற்பார்வையாளரிடம் அதனை சமர்பித்துவிட்டு பணியை தொடங்குவர். பணியாளர்களின் அட்டையைக் கொண்டு அவர்களின் வருகை பதிவு செய்யப்படும். அதனடிப்படையில் ஊதியமும் செலுத்தப்படும். எனினும், அதில் முறைகேடு, ஆள்மாறாட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவு செய்யும் நடைமுறை நாடு முழுவதும் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக கடந்த டிசம்பர் 23ஆம் தேதி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ஒரு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி, பணியாட்களின் வருகையும் இனி தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பின் (NMMS) மொபைல் செயலியில்தான் பதிவு செய்யப்படவுள்ளது. ஜியோடேக் (போட்டோ மற்றும் வீடியோக்கள் அடங்கிய புவியியல் இடங்கள்) முறையில் பணியாளர்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன.
இதற்கு முன்பு கடந்த மே முதல் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கும் வேலையிடங்களில் இந்த நடைமுறை இருந்து வந்தது. தற்போது அனைத்து இடங்களுக்கும் அமலாகியுள்ளது. இத்திட்டத்தில் ஈடுபடும் அனைத்து தொழிலாளர்களும் தங்களின் வருகையை வேலைநாளின் முற்பகல் மற்றும் பிற்பகல் இருவேளையும் குறித்த நேரத்தில் புகைப்படத்துடன் கைப்பேசி செயலி மூலம் தவறாமல் பதிவு செய்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். அதாவது செல்போன் செயலியை ஆன் செய்துவிட்டு நம் முகத்தை காட்டினால் அது வருகைப்பதிவாக எடுத்துக்கொள்ளும். குறிப்பிட்ட நபர் அங்கு இருந்தால் மட்டுமே இது முடியும் என்பதால் இந்தமுறையில் ஆள்மாறாட்டம் நடக்காது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால், கிராமப்புறங்களில் தொழில்நுட்ப வசதிகள் இல்லாதது, நெட்வொர்க் கிடைக்காதது, அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இல்லாதது ஆகியவை டிஜிட்டல் முறையில் வருகையை பதிவு செய்வதில் சிக்கலை ஏற்படுத்தும் சூழலும் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.