முகப்பு /செய்தி /இந்தியா / க/பெ ரணசிங்கம் பட பாணியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்... 8 மாதமாக தினமும் ராணுவ வீரரின் உடலை தேடி அலையும் தந்தை!

க/பெ ரணசிங்கம் பட பாணியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்... 8 மாதமாக தினமும் ராணுவ வீரரின் உடலை தேடி அலையும் தந்தை!

 8 மாதமாக தினமும் ராணுவ வீரரின் உடலை தேடி அலையும் தந்தை!

8 மாதமாக தினமும் ராணுவ வீரரின் உடலை தேடி அலையும் தந்தை!

காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ராணுவ வீரரின் உடலை தோண்டி எடுப்பதற்காக அவரின் தந்தை தினமும் அலைந்து வருவது கண்கலங்கச் செய்வதாக அமைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயது ராணுவ வீரர் ஷாகிர் மன்சூர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி தீவிரவாதிகள் சிலரால் கடத்தப்பட்டார். பின்னர் ஷாகிர் மன்சூரின் ரத்தம் தோய்ந்த ஆடை அவரின் வீட்டின் அருகே கண்டெடுக்கப்பட்டது. மாயமான ஷாகிர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் அவருடைய உடல் இன்னமும் மீட்கப்படவில்லை, இருப்பினும் அவரின் ஆடைகள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள நிலத்தில் ஷாகிர் மன்சூரின் உடல் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அவருடைய 56 வயது தந்தை மன்சூர் அகமது வகாய், கடந்த 8 மாதங்களாக தினந்தோறும் தோண்டிப் பார்த்து வருவது பாசப்போராட்டத்தை பறைசாற்றுவதாக உள்ளது.

தனது மகன் ஷாகிர் மன்சூரை கடைசியாக பார்த்ததை நினைவு கூறும் மன்சூர் அகமது வகாய், ஈகைத் திருநாள் அன்று மதிய உணவை ஒன்றாக குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டோம். அதன் பின்னர் வீட்டைவிட்டு வெளியே சென்றவர் சில நிமிடங்களில் எங்களை தொடர்பு கொண்டு தான் சில நண்பர்களுடன் வெளியே செல்வதாகவும் இது தொடர்பாக ராணுவத்தினரிடம் தெரிவிக்க வேண்டாம் எனவும் கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார். ஆனால் அதற்கு முன்னரே அவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டனர் என்பதை பின்னர் தான் அறிந்தோம், கடைசியாக ஒரு முறை குடும்பத்தினரிடம் பேச வேண்டும் என அவர்களிடம் கேட்டு அது போல அவர் பேசியிருந்தார் என்றார்.

அடுத்த நாள் குல்காமில் ஷாகிரின் இருசக்கர வாகனம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. பின்னர் வீட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அவருடைய ரத்தம் தோய்ந்த ஆடைகள் கிடைத்தது.

இதன் பின்னர் நெருங்கிய உறவினர் ஒருவரின் கனவில் என் மகன் வந்ததாகவும் அப்போது என்னுடைய ஆடைகளை கண்டெடுத்த இடத்தில் தான் என் உடல் புதைக்கப்பட்டிருக்கிறது என கூறியதாக என் உறவினர் கூறினார். இதனை அண்டை வீட்டாரிடமும் தெரிவித்தேன், அவர்கள் 30 பேர் திரண்டு என்னுடன் வந்தனர், நாங்கள் அனைவரும் அப்பகுதியில் நிலத்தை தோண்டி என் மகனின் சடலத்தை தேடினோம்.

இத்தனை மாதங்களாக எனக்கு நிம்மதியான தூக்கம் இல்லை. என் மகனின் உடல் கிடைக்கும் வரை என்னால் எப்படி தூங்க முடியும்? அவனுக்கு இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டாமா?. என் கிராமவாசிகள் அனைவருக்கும் என்னுடன் இத்தனை நாட்களாக உறுதுணையாக உதவி வருகின்றனர். தினமும் சிலர் என்னுடன் வந்து என் மகனின் சடலத்தை தேடுகின்றனர்.

என் மகனை யார் கடத்தி கொலை செய்தார்கள் என தெரியும். அந்த 4 தீவிரவாதிகளும் என்கவுண்டரில் கொல்லப்பட்டுவிட்டனர் என்றார். இருப்பினும் மகனை இழந்த துயரத்தில் எப்படியும் அவரின் உடலை கண்டுபிடித்து அவருக்கு இறுதிச் சடங்கு செய்துவிடவேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக தேடி வருகிறார் அந்த பாசத் தந்தை. தனது மகனின் உடலையும் கண்டுபிடித்துத் தரவில்லை, அவர் இந்தியாவுக்காக உயிர் நீத்தார். அவரை தியாகியாக அறிவிக்க வேண்டும் என்பதே அவரின் தந்தை மன்சூர் அகமது வகாயின் கோரிக்கையாகும்.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்தினை கண் முன் காட்டுவதாக அந்த தந்தையின் பாசப்போராட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது. க/பெ ரணசிங்கம் படத்தில் வெளிநாட்டு வேலைக்காக சென்ற போது விபத்தில் இறந்து போன கணவரின் உடலை தாய்நாட்டிற்கு கொண்டுவந்து இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் என்ற போராட்டத்தை வெளிப்படுத்தும் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பார்.

க/பெ ரணசிங்கம்

காவல்துறையினரின் கோப்புகள்படி ஷாகிர் மாயமான நபர் பட்டியலில் உள்ளார். அவருடைய உடல் எங்கு புதைக்கப்பட்டது என்பது தெரியாது. அவரைப் பற்றி எந்தத் தகவல் கிடைத்தாலும் உடனடியாக குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தப்படும் என்று காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் கூறினார்.

First published:

Tags: Actor vijay sethupathi, Indian army, Jammu and Kashmir