மமதா பானர்ஜி தமிழகத்தையும் எதிரியாக கருதியிருப்பார்: பிரதமர் மோடி பேச்சு

மமதா பானர்ஜி தமிழகத்தையும் எதிரியாக கருதியிருப்பார்: பிரதமர் மோடி பேச்சு

மோடி

நான் என்றுமே என் மக்களுக்காக பிரார்த்தனை செய்வேன், யாரும் அடிபடக் கூடாது என விரும்புகிறேன். ஆனால் என்ன செய்வது, அவருடைய ஸ்கூட்டி நந்திகிராமில் விழ வேண்டும் என்று விதியில் இருக்கிறது என மமதாவின் தோல்வியை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசினார்.

  • Share this:
மாற்றம் தருவார் என மேற்குவங்க மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை மம்தா பானர்ஜி அழித்துவிட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் மமதா பானர்ஜி குறித்து பேசுகையில், தமிழகத்தை உவமையாக காட்டி பிரிகேட் மைதானத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் பாஜகவின் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மேற்குவங்கத்தின் வளர்ச்சிக்கான வாக்குறுதி அளிக்கவும், மேற்கு வங்கத்தின் கலாச்சாரத்தை பாதுகாக்கவும் வந்துள்ளதாக கூறினார். இந்தத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ஒரு பக்கமாகவும், மக்கள் வேறொரு பக்கமாகவும் உள்ளதாகக் கூறினார்.

அடுத்த 25 ஆண்டுகள் மேற்குவங்கத்தின் முன்னேற்றத்தில் மிக முக்கியமானது என்று சுட்டிக்காட்டிய மோடி, 2047-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததன் நூற்றாண்டு விழா கொண்டாடும்போது, நாட்டை மீண்டும் கொல்கத்தா வழிநடத்தும் என்றும் தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகளின் வளர்ச்சிக்கு வரும் 5 ஆண்டுகளே அடித்தளம் அமைக்கும் என்றும் மோடி கூறினார்.

ஏழ்மையான சூழலில் தாம் வளர்ந்ததாக கூறிய மோடி, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏழைகளின் அவல நிலை தனக்கு புரியும் என்று கூறினார். மேலும், ஏழை மக்களே தனது நண்பர்கள் என்றும், அவர்களின் நலனுக்காக தொடர்ந்து உழைக்க உள்ளதாகவும் நரேந்திர மோடி உறுதியளித்தார். மேலும் மேற்குவங்கத்தில் உண்மையான மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டதை இன்று கண் கூடாக பார்க்க முடிவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே மமதா குறித்து பேசிய பிரதமர் மோடி, சில நாட்களுக்கு முன்னர் மமதா பானர்ஜி ஸ்கூட்டியில் சென்றதை பார்த்தோம், நல்ல வேளையாக அவர் கீழே விழவில்லை, இல்லையென்றால் அந்த ஸ்கூட்டி தயாரிக்கப்பட்ட மாநிலத்தை அவர் எதிரியாக கருதியிருப்பார். தமிழகத்தில் அந்த ஸ்கூட்டி தயாரிக்கப்பட்டிருந்தால் தமிழகத்தை தன் எதிரியாக பிரகடனப்படுத்தியிருப்பார் என நகைச்சுவையாக கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ஆச்சரியம் அளிக்கும் விதமாக மமதாவின் ஸ்கூட்டி பவானிபோருக்கு (மமதாவின் சொந்த தொகுதி) செல்லாமல் டர்ன் அடித்து நந்திகிராமுக்கு (தற்போது மமதா போட்டியிடும் தொகுதி) சென்றுவிட்டது. நான் என்றுமே என் மக்களுக்காக பிரார்த்தனை செய்வேன், யாரும் அடிபடக் கூடாது என விரும்புகிறேன். ஆனால் என்ன செய்வது, அவருடைய ஸ்கூட்டி நந்திகிராமில் விழ வேண்டும் என்று விதியில் இருக்கிறது” என மமதாவின் தோல்வியை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி வருகைக்கு முன்னதாக பரேட் மைதானத்திற்கு வருகை தந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த பாலிவுட்டின் முன்னாள் நட்சத்திர நடிகர் மிதுன் சக்கரபோர்த்தி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ராஜ்யசபா எம்பியாக இருந்தவர் மிதுன் சக்கரபோர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: