மீண்டும் ஹாட் ஸ்பாட் ஆன மும்பை தாராவி குடிசைப்பகுதி: கொரோனா பாதிப்பு 7 மடங்காக அதிகரிப்பு!

தாராவி

மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த உணவகம் ஒன்றில் வேலைபார்த்து வந்த 10 ஊழியர்களுக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி என பெயர் பெற்ற மும்பையின் தாராவியில் கொரோனா பாதிப்பு கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு 7 மடங்காக அதிகரித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திய கொரோனா பாதிப்பால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்தது மகாராஷ்டிரா. மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையின் மத்தியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவி அமைந்துள்ளது. மிகவும் குறுகலான இடத்தில் பல லட்சம் பேர் வசிக்கும் இங்கு பெருமான்மையான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த முறை மும்பையில் கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்த போதிலும் சிறப்பான சுகாதார முன்னேற்பாடுகளால் தாராவியில் கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது.

இதனிடையே ஜனவரி மாதத்திற்கு பிறகு தற்போது அங்கு கொரோனா பரவல் 7 மடங்காக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி 22ம் தேதி தாராவியில் 10 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு மார்ச் 4ம் தேதி நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

தாராவியில் பிப்ரவரி 28ம் தேதி புதிதாக 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மார்ச் 1ம் தேதி மேலும் 11 பேருக்கும், மார்ச் 2ம் தேதி 8 பேருக்கும், மார்ச் 3ம் தேதி 14 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதே போல அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையும் 94 ஆக உயர்ந்துள்ளது. இது பிப்ரவரி முதல் வாரத்தில் வெறும் 3 ஆக இருந்தது.

தாராவியில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பது தொடர்பாக பேசிய மும்பை மாநகாட்சியின் துணை ஆணையர், கடந்த ஆண்டு மேற்கொண்ட துரிதமான நடவடிக்கைகளை தற்போது தொடங்கி இருப்பதாக தெரிவித்தார். தாராவியில் பரிசோதனைகளின் அளவை அதிகரித்திருப்பதாகவும், பாதிப்பு உறுதியானவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களில் 15 முதல் 20 பேர் வரை பரிசோதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அளவு நேற்று 10,000ஐ தொட்டது. பல மாதங்களுக்கு முன்னர் தான் இந்த அளவுக்கு பாதிப்பு இருந்தது. மும்பையிலும் தினசரி கொரோனா பாதிப்பு 1,000 ஐ கடந்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக மத்திய அரசு சிறப்பு குழு ஒன்றை அங்கு அனுப்பியுள்ளது.

இதனிடையே மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த உணவகம் ஒன்றில் வேலைபார்த்து வந்த 10 ஊழியர்களுக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல மகாராஷ்டிரா, கேரளாவை தொடர்ந்து தினசரி கொரோனா பாதிப்பில் 1,000ஐ கடந்த 3வது மாநிலமாக பஞ்சாப் மாறியுள்ளது.

 
Published by:Arun
First published: