முகப்பு /செய்தி /இந்தியா / இனிமேல் பொறுத்துக் கொள்ள முடியாது: காங்கிரஸுக்கு தேவகவுடா எச்சரிக்கை!

இனிமேல் பொறுத்துக் கொள்ள முடியாது: காங்கிரஸுக்கு தேவகவுடா எச்சரிக்கை!

தேவகவுடா

தேவகவுடா

காங்கிரசார் தொடா்ந்து எங்களை விமர்சித்து பேசினால், நிலைமை கைமீறி போய்விடும். இனி காங்கிரசாரின் விமர்சனத்தை சகித்துக்கொள்ள மாட்டேன் என்றார் தேவகவுடா.

  • Last Updated :

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் விமர்சனத்தை இனிமேலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. இந்தக் கூட்டணிக்குள் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக,  சித்தராமையா ஆதரவாளர்கள் முதல்வர் குமாரசாமியை விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் தேவகவுடா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் முதலமைச்சர் குமாரசாமியைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று சொல்கிறார்கள். இதேபோல் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தினமும் பேசுகிறார்கள். காங்கிரஸ் கொடுத்த பட்டியலின்படி ஒரு வாரியத்தை தவிர மற்ற வாரியங்களுக்கு தலைவர்களை நியமனம் செய்துள்ளோம்.

இவ்வாறு நடந்தால் ஆட்சி நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்று எங்களுக்கு தெரியவில்லை. எத்தனை நாட்கள் தான் இவ்வாறு நடந்து கொள்வீர்கள்? ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் ஒவ்வொரு மாதிரியாக பேசுகிறார்கள். நாங்கள் இப்போது இறுதிக்கட்டத்தில் வந்து நிற்கிறோம். நாட்டில் சில கூட்டணி அரசுகள் அமைந்துள்ளன. நானும் காங்கிரசின் ஆதரவில் பிரதமரானேன். கர்நாடகாவில் தரம்சிங் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

தரம்சிங் அரசு கவிழ நானோ அல்லது குமாரசாமியோ காரணமல்ல. இப்போது காங்கிரஸ் ஆதரவில் குமாரசாமி முதலமைச்சர் ஆகி இருக்கிறார். தனக்கு ஏற்பட்ட வேதனை காரணமாக, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக குமாரசாமி கூறினார். எங்கள் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் (சித்தராமையா) கட்சிக்காக எந்த பணிகளையும் செய்யவில்லை. அப்போது எனக்கு ஏற்பட்ட வலி, கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

சோனியா காந்திக்கு அழுத்தம் கொடுத்திருந்தால், தான் முதலமைச்சர் ஆகியிருக்கலாம் என்று சித்தராமையா அடிக்கடி சொன்னார். கூட்டணி ஏற்பட்டபோதும், தன்னையே மீண்டும் முதலமைச்சராக ஆக்கியிருக்கலாம் என்று அவர் கூறினார். காங்கிரசில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. யார் ஆட்சியை நடத்துவது? என்ற கேள்வி எழுந்தது. சோனியா காந்தியின் பிரதிநிதிகள் வந்து, குமாரசாமியை முதலமைச்சராக்கினால் ஆதரவு வழங்குவதாக கூறினார்கள். இதனால் காங்கிரஸ் மேலிடத்தின் விருப்பப்படி குமாரசாமி முதலமைச்சரானார்.

கூட்டணி அரசு பற்றி யாராவது விமர்சனம் செய்தால் அதை நான் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். அதற்கு தக்க பதில் கொடுப்பேன். காங்கிரசார் தொடா்ந்து எங்களை விமர்சித்து பேசினால், நிலைமை கைமீறி போய்விடும்.

இனி காங்கிரசாரின் விமர்சனத்தை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். சித்தராமையா 5 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார். அவரை பற்றி நாங்கள் எந்த விமர்சனமும் செய்யவில்லை. குமாரசாமி மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. அவர்தான், எங்கள் மீது கோபத்தில் உள்ளார். அவருடன் இணைந்து பேசுவதற்கு தயாராக உள்ளோம்’ என்று தேவகவுடா தெரிவித்தார்.

Also see:

First published:

Tags: HD Deve Gowda, HD Kumaraswamy, Siddaramaiah