தமிழகத்தில் பட்டியலினத்தில் உள்ள 7 சாதிகளை தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயரில் அழைப்பதற்கு வகை செய்யும் சட்ட திருத்த சோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
பட்டியலினத்தில் உள்ள, கடையர், கல்லாடி, குடும்பர், பள்ளர், பன்னாடி, வாதிரியார் மற்றும் தேவேந்திர குலத்தார் ஆகிய 7 சாதிகளையும் தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசுக்கு, தமிழக அரசும் பரிந்துரை செய்திருந்தது.
இதனை ஏற்ற மத்திய அரசு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி இந்த பொதுப்பெயர் சூட்டுவதற்கான மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு கடந்த 13 ஆம் தேதி தாக்கல் செய்தது. அரசியல் சாசனம் (பட்டியல் இன சாதிகள்) ஆணை (திருத்தம்) மசோதா 2021 என்ற இந்த மசோதா கடந்த 19 ஆம் தேதி மக்களவையில் நிறைவேறியது.
இந்நிலையில், மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்பின்னர் இந்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
Must Read : பஞ்சமி நிலம் மீட்பு, ஆதி திராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் - பாஜக தேர்தல் அறிக்கை
நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியதை தொடர்ந்து, அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அவர் ஒப்புதல் அளித்த பின்னர் இது முறைப்படி சட்டமாகும்.