ஹோம் /நியூஸ் /இந்தியா /

பணமதிப்பிழப்பு... ஒட்டுமொத்த நோட்டுகளை தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா? பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணமதிப்பிழப்பு... ஒட்டுமொத்த நோட்டுகளை தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா? பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணமதிப்பிழப்பு

பணமதிப்பிழப்பு

Demonetisation: ரிசர்வ் வங்கி சட்டப் பிரிவு, 26 (2), குறிப்பிட்ட எண் தொடரை கொண்ட நோட்டுகளை தடை செய்ய மட்டுமே அதிகாரம் அளிப்பதாகவும், ஒட்டுமொத்தமாக அனைத்து நோட்டுகளையும் தடை செய்யும் அதிகாரத்தை அளிக்கவில்லை என்றும் சிதம்பரம் கூறினார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  பணமதிப்பிழப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விரிவான பிரமாண பத்திரம்  தாக்கல் செய்ய ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  2016- ஆம் ஆண்டு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.  மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து   உச்சநீதிமன்றத்தில் 58 வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டிஎஸ் தாக்கூர், பணமதிப்பிழப்பு என்ற அரசின் நோக்கம் பாராட்டுக்குரியது என்றும்  மத்திய அரசின் பொருளாதார கொள்கையில் தலையிட முடியாது என்றும்  கூறியிருந்தார். வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்தது.  மற்ற  உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கும் தடை விதித்தது.

  ஆனால் மத்திய அரசின் நடவடிக்கையில் சட்ட பிழைகள் உள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியதால் விசாரணை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. நீதிபதிகள் எஸ் அப்துல் நசீர், பிஆர் கவாய், போபண்ணா, ராமசுப்ரமணியன் மற்றும் நாகரத்தனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

  புதன் கிழமை நடைபெற்ற விசாரணையின் போது. பாதிக்கப்பட்ட தனி நபர்கள் தொடர்பான பிரச்னைகள் மீது தனியாக நடவடிக்கை எடுக்கலாம், என்றும் பணமதிப்பிழப்பு என்பது செய்து முடிக்கப்பட்டுவிட்ட ஒரு செயல் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார். நீதிமன்றத்தின்  நேரத்தை வீணடிக்க தேவையில்லை என்றும் அவர் வாதாடினார்.

  இதற்கு கடும்  எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞரான முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், பணமுடக்கம் அரசின் தனி அதிகாரம் என்று கூறி 99 சதவிகித  பணத்தையும் முடக்கினால் என்ன செய்வது? என  வினவினார். மேலும் ரிசர்வ் வங்கி சட்டப் பிரிவு, 26 (2), குறிப்பிட்ட எண் தொடரை கொண்ட நோட்டுகளை தடை செய்ய மட்டுமே அதிகாரம் அளிப்பதாகவும், ஒட்டுமொத்தமாக அனைத்து நோட்டுகளையும் தடை செய்யும் அதிகாரத்தை அளிக்கவில்லை என்றும் சிதம்பரம் கூறினார்.

  இதையும் படிங்க: ரயில் பெட்டி தயாரிப்பில் சாதனை படைக்கும் ICF நிறுவனம்... 70,000 பெட்டிகளை தயாரித்து அசத்தல்

  1978- ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் தனியாக சட்டம் இயற்றப்பட்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதாக  குறிப்பிட்ட சிதம்பரம்,  எனவே ரிசர்வ்  வங்கி சட்டப்பிரிவுகள் 24 மற்றும் 26 நோட்டுக்களை செல்லாதவையாக அறிவிக்க அனுமதிக்கிறா என்பதை பார்க்க வேண்டும் என்றும் கூறினார். இந்த விவகாரம் நீர்த்து போகவில்லை என்றும் புழக்கத்தில் உள்ள 86 சதவிகித நோட்டுகளை தடை செய்ய  தனி சட்டம் தேவையா? என ஆராய வேண்டும் என்றும் கூறினார்.

  சிதம்பரத்தின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், ரிசர்வ் வங்கி சட்டப்பிரிவு 26(2) -ன் படி, மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து, விரிவான பிரமாண பத்திரம்  தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Demonetisation, RBI, Supreme court